இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பெருஞ்சுவர் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் புஜாரா. இவர் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நேர்காணலின்போது, 2017ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டி குறித்தும், அவர் அப்போட்டியில் விளையாடிய விதம் குறித்தும் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய புஜாரா, "அந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர்கள் என்னையும், சஹாவையும் வெளியேற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் முக்கியமான விஷயம் நான் சஹாவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து, தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது அவர்களை பெரிதும் சோர்வடைய செய்தது. மேலும் சஹா இல்லாமல் நாங்கள் அவ்வளவு பெரிய இலக்கை நிர்ணயித்திருப்போமா என்பது தெரியாது.
அதேசமயம் ராஞ்சி மைதானமானது பந்து வீச்சாளர்களுக்கு சாதகம் இல்லாத ஒரு ஆடுகளம். அதில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் எப்போதும் எங்களது விக்கெட்டுகளை கைப்பற்றுவத்திலேயே கவனம் செலுத்தினர். இருப்பினும் அப்போட்டியில் நான் 500க்கும் மேற்பட்ட பந்துகளை ஆடியபோதுதான், அவர்களின் கண்களில் என்னால் சோர்வை உணர முடிந்தது" என்று தெரிவித்தார்.
2017ஆம் ஆண்டு ராஞ்சியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 603 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. அப்போட்டியில் இந்திய அணியின் புஜாரா, 525 பந்துகளை எதிர்கொண்டு 202 ரன்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.