கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில், இப்பெருந்தொற்றுலிருந்து தமது நாட்டு மக்களை பாதுகாக்க உலகின் பல நாடுகளும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
இப்பெருந்தொற்றால் உணவின்றி தவித்து வரும் ஏழை குழந்தைகளுக்கு, தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டூ பிளேஸிஸ், அவரது மனைவி இமாரி இருவரும் இணைந்து உணவு வழங்கி வருகின்றனர். இச்செயலை அறிந்த இந்திய அணியின் நட்சத்திர வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டனுமான சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவில், "கோவிட்-19 பெருந்தொற்றால் உணவின்றி தவித்து வரும் 35 ஆயிரம் குழந்தைகளுக்கு உணவு வழங்கி உதவிய டூ பிளேஸிஸ் மற்றும் அவரது மனைவி இமாரி ஆகியோரின் செயலைக்கண்டு நான் பெருமிதம் அடைகிறேன். மேலும், அனைவரிடத்திலும் நான் வேண்டுவது ஒன்றுதான். உங்களால் இயன்ற உதவிகளை ஏழைகளுக்கு செய்யுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு டூ பிளேஸிஸ், 'நன்றி சகோதரரே. நீங்கள் மிகச் சிறந்த மனிதர்' என்று ட்விட்டரில் பதிலளித்துள்ளார். இவர்கள் இருவரும் இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவருவது குறிப்பிடத்தக்கது.