இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் இதுவரை 5,734 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 166 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல பாகிஸ்தானில் 4,263 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு மட்டுமின்றி 61 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், இந்த இரண்டு நாடுகளிலும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் வகையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடத்த வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
"இந்த இக்கட்டான சூழ்நிலையை சரி செய்ய இந்தியா - பாக் இடையே மூன்று போட்டிகள் கொண்ட தொடரை நடத்தலாம். இதன்மூலம்,போட்டியின் முடிவு எப்படியிருந்தாலும் இருநாட்டு ரசிகர்களும் ஏற்றுக்கொள்வர். விராட் கோலி சதம் அடித்தாலும் சரி, பாபர் அசாம் சதம் அடித்தாலும் சரி அது இருநாட்டு ரசிகர்களும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். களத்தில் என்ன நடந்தாலும் இரு அணிகளும் வெற்றியாளர்கள்தான்.
இப்போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதால் இதில் எவ்வளவு பணம் கிடைத்தாலும் அதை கரோனா வைரஸ் எதிர்ப்பு நிதிக்காக இந்தியா - பாகிஸ்தான் இருநாடுகளும் சரிசமமாக பகிர்ந்துகொள்ளலாம். தற்போதைய சூழலில் நாம் அனைவரும் வீட்டில்தான் முடங்கியிருக்கிறோம். இந்த கரோனா வைரஸ் கட்டுப்படுத்திய பிறகு வழக்கம்போல் போட்டிகள் நடைபெற தொடங்கும்.
அப்போது இந்தப் போட்டியை துபாயில் வேண்டுமானாலும் நடத்தலாம். இந்தத் தொடர் நடக்கும்பட்சத்தில் இருநாடுகளுக்கு இடையிலான உறவில் முன்னேற்றம் ஏற்படலாம். கரோனா வைரஸால் பெரும்பாலான நாடுகள் ஸ்தம்பித்துள்ள நிலையில், இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் ஒருவருக்கு ஒருவர் உதவ முன்வர வேண்டும்.
இந்தியா எங்களுக்கு 10 ஆயிரம் சுவாசக் கருவிளை வாங்க உதவி செய்தால் அந்த நன்றியை பாகிஸ்தான் என்றும் மறக்காது. இந்தப் போட்டி நடைபெற வேண்டும் என நான் பரிந்துரைக்கலாம் ஆனால் அதற்கான முடிவுகள் இரு அரசுகளின் கையில்தான் உள்ளது" என்றார்.
கடந்த சில வருடங்களாக இரு அணிகளுக்கிடையே எந்தவித கிரிக்கெட் தொடர் நடக்காமல் இருக்கும் சூழலில் அக்தர் பரிந்துரைத்தப்படி இப்போட்டி நடைபெறுமா என்பது சந்தேகம்தான்.
இதையும் படிங்க: ரசிகர்களின்றி ஐபிஎல் விளையாடவும் தயார் - ஹர்பஜன் சிங்