கிரிக்கெட் ரசிகர்களால் 'யுனிவர்ஸ் பாஸ்' என்று செல்லமாக அழைக்கப்படுவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில். இவர் மைதானத்தில் இறங்கினால் சிக்சர் மழைப் பொழிவது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. குறிப்பாக ஒருநாள், டி20 போட்டிகளில் கெயிலின் ஆட்டம் என்பது பந்துவீச்சாளர்களைத் திணறடிக்கும் ஒன்றாகவே இருக்கும்.
இதனிடையே கிறிஸ் கெயில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு தங்க மோதிரத்தின் புகைப்படத்தை பதிவிட்டார். அந்த மோதிரத்தில் கிறிஸ் கெயிலின் உருவம் பொறிக்கப்பட்டு அவரது செல்லப்பெயரான யுனிவர்ஸ் பாஸ் என்ற பெயரும் இடம்பெற்றுள்ளது. மேலும், அதன் பக்கவாட்டில் கிறிஸ் கெயில் டெஸ்ட் போட்டிகளில் அடித்த அதிகபட்ச ஸ்கோரான 333 ரன்களைக் குறிக்கும் வகையில் அந்த எண்களும் இடம்பெற்றிருக்கின்றன.
அதிரடிக்கு பெயர்போன கிறிஸ் கெயிலிற்கு உலகம் முழுவதிலும் பல்வேறு ரசிகர்கள் உள்ளனர். இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 301 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களைக் குவித்திருக்கிறார். கடைசியாக இந்திய அணிக்கு எதிராக கடந்தாண்டு வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் கிறிஸ் கெயில் விளையாடியிருந்தார்.
தற்போது நியூசிலாந்தில் இருக்கும் அவர் நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் வர்ணணையாளராகத் தோன்றினார். அடுத்ததாக வரவிருக்கும் ஐபிஎல் டி20 தொடரில் டெல்லி அணியில் கெயில் களமிறங்குகிறார்.