கரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து வகையான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. அதிலும் குறிப்பாக இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது கரோனா வைரஸின் தாக்கம் ஒருசில நாடுகளில் குறையத் தொடங்கியுள்ளதால், விளையாட்டு போட்டிகளை பார்வையாளர்களின்றி நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, ஐபிஎல் தொடரை வருகிற செப்டம்பர் மாதத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் தொடரும் கரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக, ஐபிஎல் தொடரை வெளிநாடுகளில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தற்போது பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில் ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள், ஐக்கிய அரபு எமீரகத்தில் இந்த ஆண்டுக்கான போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தொடங்கிவிட்டதாகவும், வீரர்கள் பயணிக்க தேவையான விமானங்கள், அபுதாபியில் வீரர்கள் தங்குவதற்கான ஹோட்டல்கள் தேர்வில் அவர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகத்தின் அலுவலர் ஒருவர் கூறுகையில், 'ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசனை நாங்கள் ஐக்கிய அரபு எமீரகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி விரர்கள் செல்வதற்கான தனி விமானங்கள், ஹோட்டல் அறைகள் உள்ளிட்டவைகளை நாங்கள் தேர்ந்தெடுத்துவருகிறோம். அதேசமயம் இந்திய வீரர்களை, தற்போதிலிருந்தே தனிமைப்படுத்திக்கொள்ளவும் ஆலோசனைகளை வழங்கியுள்ளோம்' என்று தெரிவித்துள்ளார்.