இந்திய கிரிக்கெட் அணியில் எப்போதும் சுழல் பந்துவீச்சுக்கு என்று தனி ஒரு ஸ்பெஷலிஸ்ட் இருப்பது எழுதப்படாத ஒரு விதியாக உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் கும்ளே, ஹர்பஜனுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த அஸ்வின் என்ற ஆறடி இளைஞன் தான் இருந்துவருகிறார்.
அஸ்வின் குறித்து பேசுவோமேயானால் அவர் ஒரு சிறந்த சுழற்பந்துவீச்சாளர், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று கூறுவார்கள். ஆனால் அஸ்வினை நாம் அப்படி எளிதாக சிறந்த பந்துவீச்சாளர் என்று மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்துவிட முடியாது. காரணம் இளம் வயதிலிருந்தே கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவரும் அஸ்வின், அடிப்படையில் ஒரு பேட்ஸ்மேனும் கூட. 2000ஆம் ஆண்டு 17வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடிய அஸ்வின் மோசமான ஃபார்ம் காரணமாக வெளியேறினார்.
அதன்பின் ரஞ்சி போட்டிகளில் தமிழ்நாடு அணிக்காக விளையாடிவந்த அஸ்வின், ஐபிஎல் டி20 தொடரில் பங்கேற்றார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த அஸ்வினின் திறமை கேப்டன் தோனியின் கண்ணில் தென்பட்டது. பின்பு என்ன நடந்தது என்பது நாம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். 2011ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட்டில் அறிமுகம் செய்யப்பட்ட அஸ்வின் முதல் போட்டியிலேயே 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். பின்னாளில் ஆடிய ஒவ்வொரு போட்டியிலும் சாதனைகளைத் தொடர்ந்தார்.
அதன்பின் இந்திய ஒருநாள், டி20, டெஸ்ட் என மூன்று விதமான போட்டிகளிலும் ஆஸ்தான சுழற்பந்துவீச்சாளராக வலம்வந்த அஸ்வின், 2017ஆம் ஆண்டுக்குப்பின் ஒருநாள் அணியில் இடம்பெறவில்லை. இதற்கான காரணம் என்னவென்று நேரடியாக தெரிவிக்கப்படாமல் இருந்தாலும், தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகிய பின் கேப்டன் பொறுப்பேற்ற கோலி, புதிய சுழற்பந்துவீச்சாளர்களைக் கொண்டுவர வேண்டும் என்ற பிடிவாதத்துடன் இருந்ததும் ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது.
ஏனெனில் 2017ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆடிய அஸ்வின் பத்து ஓவர்கள் வீசி 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார். அந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. இதுவே அவர் கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டியாகும்.
இவ்வாறு சிறப்பாக பந்துவீசிக்கொண்டிருக்கும் ஒரு வீரரை திடீரென்று அணியிலிருந்து நீக்கியதற்கான காரணம் என்னவாக இருக்கக் கூடும். நிச்சயம் அவரை எப்படியாவது ஓரம் கட்ட வேண்டும் என்று தான் எண்ணியிருப்பார்கள். அதன் காரணமாகவே அணியில் இளம் ரத்தத்தை பாய்ச்ச வேண்டும் என்ற பொய்யைக் கூறி சாஹல், குல்தீப் யாதவ் போன்ற சுழற்பந்துவீச்சாளர்களை ஒருநாள், டி20 போட்டிகளில் இடம்பெறச் செய்தனர்.
சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் வேளையில் நம்முடைய வாய்ப்பு காரணமே இல்லாமல் தட்டிப்பறிக்கப்பட்டால் நமது மனது நிச்சயம் உடைந்து போகும். ஆனால் அஸ்வின் சற்று அதிலிருந்து மாறுபட்டு எந்த ஆண்டு ஒருநாள் அணியிலிருந்து ஓரம் கட்டப்பட்டாரோ அதே ஆண்டில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், உலகச் சாதனை புரிந்தார். அதிவேகமாக 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆஸ்திரேலிய வீரர் டென்னிஸ் லில்லியின் சாதனையை முறியடித்து கிரிக்கெட் அரங்கில் தான் ஒரு லீடிங் ஸ்பின்னர் என்பதை நிரூபித்துள்ளார்.
அவர், உலகுக்கு உணர்த்தினாரோ இல்லையோ ஆனால் நிச்சயம் அதை உள்ளூர்காரர்களுக்கு உணர்த்திவிட்டார். அதனால்தான் அவர் இன்றளவும் டெஸ்ட் போட்டியில் மட்டுமாவது இடம்பிடித்திருப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.
"சர்வதேச அளவில் தற்போது உள்ள சுழற்பந்துவீச்சாளர்களில், தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர் என்றால் அது அஸ்வின்தான்" என அஸ்வின் அந்தச் சாதனையை நிகழ்த்தியபோது முரளிதரன் உதிர்த்த வார்த்தைகள்தாம் இவை.
பின்னர் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அஸ்வினை சமீபகாலமாக டெஸ்ட் அணியிலிருந்தும் நீக்குவதற்கு புதிய காரணங்களை பிசிசிஐ திரட்டிவருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆம் கடந்தாண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாடிய அஸ்வின் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து ஆறு விக்கெட்டுகளை எடுத்தார். ஆனால் காயம் காரணமாக அந்தத் தொடரிலிருந்து அவர் பாதியிலேயே வெளியேற நேரிட்டது.
பின்னர் காயத்திலிருந்து அஸ்வின் மீண்டாலும், இந்திய அணி உலகக்கோப்பை தொடர்களில் பிசியானதால் அவருக்கு இந்திய அணியில் களமிறங்கும் வாய்ப்பு தள்ளிப்போனது. இந்தச் சமயங்களில் அஸ்வின் தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஒரு கேப்டனாகவும் மெருகேற்றிக் கொண்டிருந்தார். ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காகவும் டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காகவும் கேப்டனாக செயல்பட்ட அவர் அணியை சிறந்த முறையில் வழிநடத்திச் சென்றார்.
இந்த ஐபிஎல்லில் மான்கட் முறையில் அவுட் செய்தது, டிஎன்பிஎல்லில் தெருவில் ஆடும் கிரிக்கெட் வீரர்களைப்போன்று பந்துவீசியது போன்ற சர்ச்சைகளும் அவரை விட்டுவைக்கவில்லை. ஒரு வழியாக உலகக்கோப்பையும் முடிந்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கும் அஸ்வினை தேர்வு செய்தனர். ஆனால் அங்கு நடந்த விஷயம்தான் பெரும் கேள்விகளை எழுப்பின. டெஸ்ட்டில் முன்னணி பந்துவீச்சாளராக இருக்கும் அஸ்வின் ஏன் இரண்டு போட்டியிலும் அணியில் இடம்பெறவில்லை என்பதே அந்தக் கேள்வி. அவருக்குப் பதிலாக ஜடேஜா அந்தப் போட்டியில் ஒரே சுழற்பந்துவீச்சாளராக இடம்பெற்றிருந்தார்.
அதற்கு பேட்டிங்கைக் காரணம் கூறி மழுப்பிவிட்டனர். உண்மையில் சொல்லப்போனால் அஸ்வின் அணியில் இருக்கும் மற்ற சுழற்பந்துவீச்சாளர்களை விட ஒரு ஆகச்சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். அவர் காலச் சூழலுக்கு ஏற்றவாறு பேட்டிங் ஆடும் வல்லமை படைத்தவர். இந்திய அணி சில போட்டிகளில் தடுமாறியபோது பின் வரிசையில் களமிறங்கி தோல்வியிலிருந்து மீட்டும் இருக்கிறார். டெஸ்டில் அஸ்வின் இரண்டு சதம், 11 அரைசதம் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களையும் குவித்திருக்கிறார். இதைவிடவா ஒரு சிறந்த பின்வரிசை பேட்ஸ்மேன் அவர்களுக்கு தேவை.
இந்தச் சூழலில்தான் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் களம் காண்கிறார் அஸ்வின். இப்போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 502 ரன்களை குவித்து டிக்ளேர் செய்கிறது. இரண்டாம் நாள் ஆட்டத்தின் இறுதி செஷனில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க வீரர்களை அடுத்தடுத்து வெளியேற்றி தனது அசாதாரண சுழற்பந்துவீச்சால் அச்சுறுத்தினார். அவருக்குத் துணையாக மற்ற இந்திய பந்துவீச்சாளர்களும் மிரட்டுகின்றனர்.
அடுத்த நாளில் சுதாரித்துக்கொண்ட தென் ஆப்பிரிக்க வீரர்கள் டீன் எல்கர் - கேப்டன் டூபிளஸ்ஸிஸ் இணை 100 ரன்களுக்கு மேல் சேர்த்து நிற்கிறது. இந்த வேளையில் டூபிளஸ்ஸிஸை வெளியேற்றுகிறார் அஸ்வின். அதைத் தொடர்ந்து மீண்டும் நீண்ட நேரம் களத்தில் நின்று அச்சுறுத்திய டிகாக்கையும் வெளியேற்றுகிறார். அஸ்வினின் சுழலில் சிக்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 431 ரன்களுக்கு ஆட்டமிழக்கிறது. அதில் அஸ்வினின் பங்கு 7 விக்கெட்டாகும். அது மட்டுமல்லாது அவர் ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்துவது 27ஆவது முறையாகும்.
பின்னர் இரண்டாவது இன்னிஸ்ஸிலும் 323 ரன்களை குவித்த இந்தியா டிக்ளேர் செய்கிறது. இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் தியூனிஸ் டி ப்ரூயூனின் விக்கெட்டை கைப்பற்றிய அஸ்வின், டெஸ்ட் அரங்கில் அடுத்த சாதனைக்குள் அடியெடுத்துவைக்கிறார். அதிவேகமாக டெஸ்ட்டில் 350 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்து மீண்டும் ஒருமுறை தான் இந்திய அணிக்கு தேவை என்பதை உணர்த்தியிருக்கிறார். இது ஒன்றும் அவருக்குப் புதிதல்ல. அஸ்வின் செய்த இந்தச் சாதனைக்கு பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து புகழ்ந்துவருகின்றனர்.
நேற்றைய போட்டி முடிந்தபின் பேசிய இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகம்மது ஷமி, அஸ்வின் ஜடேஜா போன்ற சுழற்பந்துவீச்சாளர்கள் இருக்கும் பட்சத்தில் எங்களைப்போன்ற வேகப்பந்துவீச்சாளர்களுக்கான வேலை குறையும் என்றார். உண்மையில் அஸ்வின் இருந்தால் பந்துவீச்சாளர்கள் மட்டுமல்ல பேட்ஸ்மேன்களும் சற்று ரிலாக்ஸாக இருக்கலாம் என்பதே உண்மை.
அவர் தவிர முன்னாள் இந்திய நட்சத்திரம் சுனில் கவாஸ்கர், இந்திய டெஸ்ட் அணியில் அஸ்வின் கண்டிப்பாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். மேலும் வெளிநாட்டு மைதானங்களில் அந்நாட்டு வீரர்கள் எடுக்கும் விக்கெட்டுகளை பார்த்துவிட்டு அஸ்வின் ஏன் இத்தனை விக்கெட்டுகளை எடுக்கவில்லை என கேள்வியெழுப்பக்கூடாது. மேலும் வெளிநாட்டு வீரர்கள் எடுக்கும் விக்கெட்டுகள் இந்திய பேட்ஸ்மேன்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கிரிக்கெட்டில் இது போன்று நடப்பது சகஜமான ஒன்றே. எனவே அஸ்வினை பிற வீரர்களுடன் ஒப்பிடுவதை தவிர்த்துவிட்டு அவரது திறமையை முறையாக உபயோகிக்கும்படியும் அவர் அறிவுறுத்தியிருந்தார்.
இதை யாரும் கூறிதான் புரிய வேண்டும் என்பதில்லை. அஸ்வினின் விளையாட்டைப் பார்த்தாலே அவரை நீக்குவதற்கான காரணத்தை விட்டுவிட்டு அவரை மேலும் வலுப்படுத்துவதற்கான வழியை தேட முடியும். தற்போது அவருக்கு அளிக்கப்பட்டுவரும் டெஸ்ட் வாய்ப்பையும் பறிக்காமல் இருந்தால் நிச்சயம் முத்தையா முரளிதரனின் 800 விக்கெட் என்ற சாதனையை அவர் முறியடிக்க முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.