2019ஆம் ஆண்டிற்கான கரீபியன் ஃப்ரீமியர் லீக் போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்றுவருகினறன. இத்தொடரின் 14ஆவது லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி செயின் கிட்ஸ் மற்றும் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் டாஸ் வென்ற நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் லிண்டல் சிம்மன்ஸ் தனது அதிரடி ஆட்டத்தினால் அணியின் ரன் கணக்கை உயர்த்தினார். இவர் 45 பந்துகளை எதிர்கொண்டு ஒன்பது பவுண்டரிகள், ஆறு சிக்சர்கள் உள்பட 90 ரன்களை விளாசினார்.
இதன்மூலம் நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 216 ரன்களை எடுத்தது. அதன்பின் 217 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆரம்பமே அதிர்ச்சியளித்தது. அந்த அணியின் தாமஸ், இவன்ஸ், முகமது ஹபீஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதன்பின் எவின் லீவிஸுடன் இணைந்த பேட்ரியாட்ஸ் அணியின் கேப்டன் கார்லோஸ் பிராத்வைட் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 30 பந்துகளில் 64 ரன்களை சேர்த்தார். இதன்மூலம் அந்த அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டிற்கு 216 ரன்ளை எடுத்து ஆட்டத்தை சமன் செய்தது.
அதன்பின் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டு பேட்ரியாட்ஸ் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் கேப்டன் பிராத்வைட் மற்றும் எவின் லீவிஸ் களமிறங்கினர். முதல் பந்தை எதிர்கொண்ட பிராத்வைட் சிக்ஸ் அடிக்க, ஐந்தாவது பந்தில் ஒரு சிக்சரும், கடைசிப் பந்தில் ஒரு பவுண்டரி என மொத்தம் 18 ரன்களை சேர்த்தது பேட்ரியாட்ஸ் அணி.
அதன்பின் 19 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணிக்கு சூப்பர் ஓவரையும் கார்லோஸ் பிராத்வைட் வீசினார். அவர் வீசிய இரண்டாவது பந்திலேயே நைட் ரைடர்ஸ் அணியின் பிராவோ பெவிலியன் திரும்ப சூப்பர் ஓவரில் அந்த அணி ஐந்து ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி சூப்பர் ஓவர் முறையில் நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. ஆட்டத்தின் வெற்றிக்கு வித்திட்ட நேவிஸ் பேட்ரியட்ஸ் அணியின் கேப்டன் கார்லஸ் பிராத்வைட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.