ஐபிஎல் தொடரைப் போலவே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பேசப்படும் டி20 தொடர்தான் கரீபியன் பிரிமியர் லீக். இத்தொடரானது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தால் 2013ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவருகிறது.
இத்தொடருக்கான ஆறாவது சீசன் நேற்று முதல் தொடங்கியது. இதன்முதல் போட்டியில் நடப்பு சாம்பியான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி செயிண்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் டாஸ் வென்ற நெவிஸ் பேட்ரியட்ஸ் அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்பின் களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரர்கள் லிண்டல் சைமன்ஸ்-சுனில் நரேன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அதன்பின் களமிறங்கிய ராம்டின் - நீசம் ஜோடி அதிரடி ஆட்டத்தில் இறங்கியது.
இதில் 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தினேஷ் ராம்டினும் 33 ரன்களில் ஜிம்மி நீசமும் ஆட்டமிழந்தனர். அதன்பின் கேப்டன் கிரண் பொல்லார்ட் களமிறங்கிய எதிரணியின் பந்துவீச்சை சிதறடித்தார். இவர் 32 பந்துகளில் 3 பவுண்டரி, 4சிக்சர் என 47 ரன்களை குவித்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை எடுத்தது. நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி சார்பில் ஷெல்டன் காட்ரோல், ராயட் எம்ரிட் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அதன்பின் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்துவந்தது. அந்த அணியின் அதிகபட்சமாக எவின் லீவிஸ் 36 ரன்களும் ஃபபியன் ஆலன் 30 ரன்களையும் எடுத்தனர்.
மற்ற அனைத்து வீரர்களும் செற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் அந்த அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையுமிழந்து 141 ரன்களை மட்டுமே எடுத்தது. நைட்ரைடர்ஸ் அணி சார்பில் நீசம் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தியது. அணியின் வெற்றிக்காக பேட்டிங், பவுலிங் என இரு பிரிவிலும் சிறப்பாக செயல்பட்ட நைட்ரைடர்ஸ் அணியின் ஜேம்ஸ் நீசம் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.