கோவிட்-19 பெருந்தொற்றால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருப்பதால், விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதில் தற்போது சில நாள்களாக கால்பந்து தொடர்கள் மட்டும் பார்வையாளர்களின்றி நடைபெற்று வருகிறது.
அந்த வரிசையில் கிரிக்கெட் போட்டிகளையும் பார்வையாளர்களின்றி நடத்துவதற்கான வேலைகளில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மும்முரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மைதானத்தினுள் வீரர்கள் பந்தை பளபளப்பாக மாற்றுவதற்கு உமிழ் நீரை பயன்படுத்துவதை தடை விதிக்கவும் ஐசிசி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், ‘வீரர்கள் உமிழ் நீரை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டால், நீங்கள் இரு முனைகளிலும் இரண்டு புதிய பந்துகளை பயன்படுத்தலாம். ஏனெனில் ஆட்டத்தின்போது பயன்படுத்தப்படும் பந்துகள் விரைவில் பளபளப்பை இழந்து, பந்துவீச்சாளர்களுக்கு கடினமான சூழலை ஏற்படுத்திவிடும்.
இதன் காரணமாக வீரர்கள் ஒவ்வொரு ஓவரின் முடிவிலும், தங்களது உமிழ் நீரை கொண்டு பந்துகளை பளபளப்பாக்கி வருகின்றனர். தற்போது ஐசிசி, உமிழ் நீர் பயன்படுத்துவதை தடைசெய்தால், அதற்கு மாற்று யோசனையாக இரு பந்துகளை பயன்படுத்தும் விதியை அவர்கள் தேர்வு செய்யலாம்’ என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர்,‘வீரர்கள் உமிழ் நீர் பயன்படுத்த ஐசிசி தடை விதிப்பது பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் கடினமான விஷயமாகும். இதற்கு உடனடியாக ஐசிசி மாற்று ஏற்பாட்டை செய்யவேண்டும். இல்லையெனில் கிரிக்கெட் போட்டியைக் காண்பது சுவாரஸ்யமாக இருக்காது’ என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'சும்மா கிழி' தோனி குறித்த காணொலியை வெளியிட்ட சிஎஸ்கே!