இந்தியா - வங்கதேசம் இடையே மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெறும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.
முதல்முறையாக இந்திய அணி பகல் - இரவு ஆட்டத்தில் விளையாடவுள்ளதால் இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே வேளையில் இப்போட்டியைக் காண அதிக ரசிகர்களை ஈர்ப்பதற்காக பெங்கால் கிரிக்கெட் நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அதன்படி மொத்தம் ஐந்து நாள் நடைபெறும் இப்போட்டியைக் காண ரூ.50, 100, 150 ஆகிய விலையில் தினசரி டிக்கெட் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நவம்பர் 22 முதல் 26 வரை இப்போட்டி நடைபெறுகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 68 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியைக் காண முடியும். எனவே போட்டி நடைபெறும் ஐந்து நாட்களிலும் மைதானத்தில் கூட்டம் இருக்க வேண்டும் என்பதற்காக பெங்கால் கிரிக்கெட் நிர்வாகம் விலை குறைவான டிக்கெட்டுகளை அறிமுகம் செய்துள்ளது.
மேலும் இப்போட்டியை பிற்பகல் 2.30 மணிக்கு பதிலாக 1.30 மணிக்கே தொடங்குவதற்காகவும் பெங்கால் கிரிக்கெட் வாரியம் பிசிசிஐயிடம் அனுமதி கேட்டுள்ளது. அவ்வாறு போட்டியை வேகமாக தொடங்கினால் ரசிகர்கள் வீட்டிற்கு வேகமாக செல்ல முடியும் என்பதால் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக பெங்கால் கிரிக்கெட் சங்க செயலாளர் அவிஷேக் டால்மியா தெரிவித்துள்ளார். மேலும் இப்போட்டிக்கு அதிகளவிலான பள்ளிக்குழந்தைகளை அழைத்துவரவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த பகல் இரவு ஆட்டம் பிற டெஸ்ட் போட்டிகளைப் போன்று இல்லாமல் முதலில் 20 நிமிடம் தேநீர் இடைவேளையும் அதைத் தொடர்ந்து 40 நிமிடங்களுக்கு இரவு உணவுக்கான இடைவேளையும் வழங்கப்படும்.