உலக பந்து வீச்சாளர்களை நடுங்க வைத்த பெருமையைப் பெற்றவர் யார் என்றால் அது ரசிகர்களினால் மிஸ்டர் ஃபெண்டாஸ்டிக் என அழைக்கப்படும் பிரண்டன் மெக்கல்லம் தான். இவர் 2002 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது தொடங்கிய அவரது பயணம் மிக விரைவாகவே அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் என்ற பெருமைக்கு எடுத்து சென்றது. அவரின் அதிரடி ஆட்டத்தைப் பார்பதற்காகவே ஒரு கூட்டம் உருவாகத் தொடங்கிய காலம் அது.
டி20 போட்டிகளின் ஆரம்ப காலமான 2005 ஆம் ஆண்டு முதல் போட்டியிலேயே அதிரடியில் அசத்தத் தொடங்கினார். அதன் பின் நடைபெற்ற 2007ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியை அரையிறுதி வரை அழைத்துச் சென்றார்.
அதன் பின் தொடங்கிய் இந்தியன் பிரீமியர் லீக்கின் முதல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒபந்தமானார். அந்த சீசனின் முதல் போட்டியை எதிர்கொண்ட கொல்கத்தா அணி மெக்கல்லம் என்ற ஒருவனால் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்த முடிந்தது.
அந்த போட்டியில் அவர் பாரபட்சம் பார்க்காமல் 73 பந்துகளில் 158 ரன்களை விளாசி பந்து வீச்சாளர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தார். அன்றிலிருந்து மெக்கல்லம் என்றால் திரும்பி பார்க்கும் ரசிகர்கள் பட்டாளம் உருவானது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஸ்வான் டெயிட் 155 கி.மீ வேகத்தில் வீசிய பந்துகளை தனது பேட்டிங் திறமையினால் சிக்ஸர்களாக மாற்றிய பெருமை அவரை மட்டுமே சாரும். அந்த போட்டியில் அவர் 116 ரன்களை விளாசி தனது முதல் சர்வதேச டி20 சதத்தை அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.
அதன் பின் எந்த வகையான கிரிக்கெட் போட்டியில் விளையாடினாலும் அவரது ஆட்டத்தை பார்பதற்கு அங்கு ஒரு தனிக்கூட்டமே காத்திருக்கும். இவ்வாறு கொடி கட்டிப்பறந்த மெக்கல்லம் 2012 ஆம் ஆண்டு உலகக்கோப்பை டி20 தொடரில் தனது இரண்டாவது சர்வதேச டி20 சதத்தைப் பதிவு செய்தார்.
அதன் பின் அந்த ஆண்டு முதல் அணியின் கேப்டனாக செயல்படத் தொடங்கினார். அவரின் கேப்டன்ஷிப்பில் நியூசிலாந்து பல சாதனைகளையும் படைத்தது. 2014 ஆம் ஆண்டு இந்திய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 192 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறியது. மறுமுனையில் இந்தியா 438 என்ற இமாலய ரன்குவிப்பில் இறங்கியது. அதன் பின் இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறிய நியூசிலாந்து அணியை தோல்வியிலிருந்து மீட்டத்து மட்டுமில்லாமல் தனது முதல் சதத்ததை அடித்து இந்திய அணி பந்து வீச்சாளர்களை கதறவிட்டார்.
அந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரிலிலும் மெக்கல்லம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்போதிலிருந்து அவரையும் தமிழ்நாட்டு ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
அதே ஆண்டு உலகக்கோப்பை தொடரை மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து அணி இறுதிப்போட்டி வரை சென்று கைவிட்டது. அந்த உலகக்கோப்பை தோல்விக்கு பின் தனது கேப்டன் பதவியை துறந்தார் மெக்கல்லம்.
அதனைத் தொடர்ந்து தனது அதிரடி ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்திய அவர் அடுத்த அண்டு நடைபெற்ற ஜிம்பாப்வே அணியுடனான தொடரிலிருந்து தனது சர்வதேச கிரிக்கெட்டிற்கு ஓய்வளித்தார். கிரிக்கெட்டை பொறுத்த வரையில் உச்சத்தில் இருந்த ஒரு வீரர் தனது ஓய்வு முடிவை அறிவித்தது அதுவே முதல் முறை.
அதன் பின்னும் ஐபிஎல், சிபிஎல், பிபிஎல் என அனைத்து முன்னணி டி20 தொடர்களிலும் தனது அதிரடியை தொடர்ந்து வந்த அவர் இந்த ஆண்டு முதல் சிபிஎல் அணியான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்படத் தொடங்கினார். தற்போது ஐபிஎல்லில் தனது முதல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக இனி செயல்படவுள்ளார் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கல்லம்.
இவர் இன்று தனது 38ஆவது பிறந்தநாளை ரசிகர்கள் மற்றும் தனது குடும்பத்தினருடன் கொண்டாடி வருகிறார். இவரின் ஓய்வுக்கு பிறகு தான் சில பந்துவீச்சாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:'வந்துட்டேன்னு சொல்லு... திரும்பி வந்துட்டேன்னு சொல்லு' - இது மெக்கல்லம் கம் பேக்!