கரோனா பெருந்தொற்றால் அனைத்து வகை விளையாட்டுப் போட்டிகளின் அட்டவணைகளும் மாற்றமடைந்துள்ளன. குறிப்பாக, டி20 உலகக்கோப்பையின் அட்டவணை தலைகீழாக மாறியுள்ளது. இந்தாண்டு அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை தொடரை 2022ஆம் ஆண்டுக்கு மாற்றுவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
ஆனால், 2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறவிருந்த நிலையில், அதனை 2021ஆம் ஆண்டில் நடத்துவதாக பிசிசிஐ அறிவித்தது. சமீபத்தில் அரபு நாடுகளில் வெற்றிகரமாக ஐபிஎல் போட்டிகளை நடத்திமுடித்து விட்டதால் பிசிசிஐக்கு நம்பிக்கை பிறந்திருப்பதாக அதன் செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.
இதுதொடர்பாகப் பேசிய அவர், “பிசிசிஐ திட்டமிட்டபடி மிகச் சரியான முறையில் செயல்பட்டு பாதுகாப்பாக 2021ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரை வெற்றிகரமாக நடத்திமுடிக்கும். அதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.
பார்வையாளர்களுக்கு புதுவிதமான அனுபவம் நிச்சயமாகக் கிடைக்கும் வகையில் தொடரை நடத்திக் காட்டுவோம். அதேபோல் ஐசிசிக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் அணி வீரர்களுக்கும் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் இந்தியாவில் இருக்கும்போது உங்கள் வீடுகளில் இருப்பது போல் உணரவைப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்வோம். எத்தனை சவால்கள் வந்தாலும் உலகக்கோப்பை தொடரை வெற்றிகரமாக நடத்துவோம்” என்றார்.
இதையும் படிங்க: சிட்னியில் தரையிறங்கிய இந்திய அணி!