கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் அனைத்துவகையான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. அதிலும் குறிப்பாக ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில் வைரஸின் தாக்கம் குறையத் தொடங்கியதை அடுத்து, உள்ளூர் டி20 தொடரான சயீத் முஷ்டாக் அலி தொடர் கடந்த ஜனவரி 9ஆம் தேதி முதல் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, பிற உள்ளூர் கிரிக்கெட் போட்டித் தொடர்களையும் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.
இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், “கரோனா தொற்று நம் ஒவ்வொருவரையும் சோதித்துள்ளது. இருப்பினும் உங்களது ஆதரவினால், நாங்கள் உள்நாடு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்க முடிந்தது. இருந்தபோதிலும் நாங்கள் பல்வேறு தொடர்களை இழந்துள்ளோம். அதனால் குறுகிய நேரத்தில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை தயாரிப்பதற்கு கடினமாக உள்ளது.
எனினும், பெண்கள் கிரிக்கெட் நடைபெறுவதை உறுதி செய்வது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. மேலும் விஜய் ஹசாரே கோப்பையுடன், சீனியர் மகளிர் ஒருநாள் போட்டிகளையும், 19 வயதுக்குட்பட்டோருக்கான வினு மன்கட் கோப்பை தொடரையும் நடத்தவுள்ளோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சயீத் முஷ்டாக் அலி தொடர்: இறுதிச்சுற்றில் தமிழ்நாடு - பரோடா மோதல்!