இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்தவர் ஹர்பஜன் சிங். இந்நிலையில் இவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவின் யூடியூப் வலைதளத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், பிசிசிஐ இந்திய வீரர்களை வெளிநாட்டில் நடைபெறும் லீக் தொடர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், "பிசிசிஐ இந்திய வீரர்களை வெளிநாட்டு லீக்கில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் இந்திய அணியில் தேர்வு செய்ய விரும்பாத, ஒப்பந்தமற்ற வீரர்களை அனுமதிக்க வேண்டும். மேலும் 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர்கள், 35 வயதுக்கு மேற்பட்ட வீரர்கள் வாரியத்திடம் அனுமதி பெறும் ஒரு அமைப்பை நீங்கள் உருவாக்க வேண்டும்.
கிரிக்கெட் வீரர் ஒருவர் நூறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது சாதாரண காரியம் அல்ல. ஆனால் அந்த பட்டியலில் எனது பெயர் இடம்பிடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இருப்பினும் நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது 400ஆவது விக்கெட்டை வீழ்த்தியிருந்தாலும், அதற்கு பிறகு நான் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படாதது வேதனையை அளித்தது.
அதேசமயம் எனது இறுதி போட்டிக்குக்கூட என்னை அழைக்கவில்லை. மேலும் வீரேந்தர் சேவாக், கவுதம் கம்பீர், வி.வி.எஸ். லக்ஷ்மன் மற்றும் இன்னும் பல வீரர்கள் சிறந்த பிரியாவிடைக்கு தகுதியானவர்கள். ஆனால் எங்கள் வீரர்களை பிசிசிஐ மதிக்கவில்லை என்றால், யாரும் அவர்களை வெளியேவும் மதிக்க மாட்டார்கள். எங்களுக்கு எப்படி நடந்திருந்தாலும் சரி, ஆனால் இனி வேறு யாருக்கும் அப்படி நடக்காமல் கவனித்துக்கொள்ளுங்கள்" என்று தெரிவித்தார்.