நடப்பு சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இதில், மும்பை - கர்நாடக அணிகளுக்கு இடையிலான போட்டி மும்பையில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 192 ரன்களும் கர்நாடக அணி 218 ரன்களும் எடுத்தன.
இதனிடையே மும்பை அணி ஃபீல்டிங் செய்தபோது ஓவர் த்ரோ சென்ற பந்தை பிடிக்க முயன்ற பிரித்வி ஷாவின் இடது கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால், ஆட்டத்திலிருந்து அவர் வெளியேறினார். இதையடுத்து, பிரித்வி ஷாவிற்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்தபோது அவரது தோள்பட்டையில் பெரிய அளவிலான காயம் ஏற்பட்டது தெரியவந்தது.
இதனால், பிசிசிஐ அவரை உடனடியாக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்பி வைக்குமாறு மும்பை அணிக்கு மின்னஞ்சல் அனுப்பியது. அதன்படி, சிகிச்சைக்காக பிரித்வி ஷா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு உடனடியாக விரைந்துள்ளார்.
முன்னதாக, ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கி எட்டு மாத தடைக்குப் பின் சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் வெளிப்படுத்திய அதே ஃபார்முடன் ரஞ்சி போட்டிகளிலும் விளையாடிவருகிறார். குறிப்பாக, பரோடா அணிக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் ரஞ்சி போட்டியில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.
இதன் பலனாக, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியா ஏ அணியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், தற்போது இவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், இந்தத் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோலியின் உருவப்படத்தை பழைய மொபைல் போன்களால் செதுக்கிய ரசிகர்!