கரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கடந்த மார்ச் மாதம் நடைபெறயிருந்த இந்தியா - தென் ஆப்பிரிக்காவுக்கு இடையிலான ஒருநாள் தொடர், இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர், வங்கதேசம் - ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான ஒருநாள் தொடர் உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், மார்ச் 29ஆம் தேதி தொடங்கயிருந்த ஐபிஎல் 13ஆவது சீசனும் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை நடப்பு ஆண்டில் ஐபிஎல் தொடர் ரத்தானால் பிசிசிஐக்கு ரூ. 4000 கோடி இழப்பு நேரிடும் என அதன் பொருளாளர் அருண் துமல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஐ.சி.சி போட்டிகளில் பங்கேற்பதை விட இருதரப்பு தொடர்களை விளையாடுவதை பி.சி.சி.ஐ பரிசீலிக்குமா என்ற கேள்வி அருண் துமலிடம் கேட்கப்பட்டது.
இதற்கு அருண் துமல், "ஆம், இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடத்துவதன் மூலம் தான் மற்ற வாரியங்களுக்கு அதிகளவில் பணம் கிடைக்கிறது. கரோனா வைரஸால் பல கிரிக்கெட் வாரியங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை மீட்டெடுக்க இரு தரப்பு தொடர்கள் உதவும். தேசிய கிரிக்கெட் வாரியங்கள் இழப்புகளின்றி செயல்பட்டால் மட்டுமே ஐசிசிக்கு வருமானம் கிடைக்கும்" என பதிலளித்தார்.
இதனிடையே, இத்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் வரும் அக்டோபர் மாதம் நடைபெறயிருந்த ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ஒருங்கிணைந்த மும்பை & சென்னை அணியின் கேப்டனாக ஜாம்பவானை நியமித்த ரோஹித், ரெய்னா!