ஐபிஎல் போட்டிகளில் டைட்டில் ஸ்பான்ஸராக கடந்த சில ஆண்டுகளாக சீனாவைச் சேர்ந்த பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ இருந்துவந்தது. ஆனால், கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, சீன பொருட்கள் மீதான எதிர்ப்பு இந்தியாவில் அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகவுள்ளதாக விவோ அறிவித்தது.
மேலும், ஜியோ, அமேசான், டாடா குழுமம், அதானி குழுமம், பைஜூஸ், ட்ரீம் 11 உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்ஸருக்கு விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளன. இந்நிலையில், இந்த பல்முனைப் போட்டியில் யோகா குரு பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனமும் தற்போது புதிதாக இணைந்துள்ளது.
இந்தாண்டு ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப் உரிமையைப் பெற போட்டியிடவுள்ள நிறுவனங்கள், தங்களது விண்ணப்பங்களை வருகிற ஆகஸ்ட் 14ஆம் தேதிக்குள் அனுப்பும்படியும், குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேரவில்லையென்றால் அந்நிறுவனத்தின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளபட மாட்டாது என்று பிசிசிஐ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்பை பெரும் நிறுவனம் இந்தாண்டு ஆகஸ்ட் 18 முதல் டிசம்பர் 31ஆம் தேதிவரை பயன்படுத்திக்கொள்ள முடியும். அதேசமயம் இந்த ஏலத்தில் பங்கேற்றவுள்ள நிறுவனங்கள் ரூ.300 கோடிக்கு அதிகமாக மட்டுமே ஏலத்தொகையை நிர்ணயிக்க வேண்டும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.