கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபிஎல் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பைத் தொடரை நடத்துவது கற்பனைக்கு எட்டாதது என அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் இயர்ஸ் எடிங்ஸ் தெரிவித்திருந்தார்.
ஆனால் டி20 உலகக்கோப்பை விவகாரத்தில் ஐசிசி எவ்வித முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்திவருகிறது. இதுகுறித்து பிசிசிஐ அலுவலர் பேசுகையில், '' இன்னும் சில காலம் மட்டுமே ஐசிசி தலைவராக இருக்கப்போகும் ஷாஷங்க் மனோகர் ஏன் உலகக்கோப்பை டி20 தொடர் பற்றி முடிவு செய்வதற்கு காலம் தாழ்த்துகிறார் என தெரியவில்லை. உலகக்கோப்பை டி20 தொடரை நடத்தும் கிரிக்கெட் வாரியமே, தொடரை நடத்த முடியாது என தெரிவித்துவிட்டது. ஆனால் ஐசிசி இதுநாள்வரை முடிவு எடுக்கவில்லை.
இதுவெறும் பிசிசிஐ அல்லது ஐபிஎல் சார்ந்த பிரச்னையோ இல்லை. ஐசிசி தனது முடிவை வேகமாக கூறினால், பல்வேறு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அதற்கேற்றாற்போல் இருநாட்டு தொடர்களை அந்த நேரத்தில் நடத்த திட்டமிட்டுக்கொள்ளும். ஐசிசியின் நடவடிக்கைகள், அனைவரையும் பாதிக்கும்.
ஐபிஎல் தொடர் நடத்தவில்லை என்றால், பிசிசிஐ சார்பாக ஐசிசிக்கு வழங்கும் நிதிகளின் பங்கு குறையும்'' என்றார்.