கரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பல்வேறு கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அனைத்து வகையான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டு, விளையாட்டு வீரர்கள் தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் அணியின் தொடக்க வீரர் மயாங்க் அகர்வாலுடனான காணொலி உரையாடலின் போது, இந்த ஊரடங்கு காலத்தில் தனது மனைவி அனுஷ்கா சர்மாவின் பிறந்தநாளுக்காக கேக் செய்தது மிகவும் தனித்துவமான ஒன்று என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய கோலி, "அனுஷ்காவின் பிறந்தநாளுக்காக நான் என் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு கேக்கை செய்தேன். அதுதான் இந்த ஊரடங்கு காலத்தில் நான் செய்த தனித்துவமான ஒன்றாக இருக்கும். நான் என் வாழ்க்கையில் ஒருபோதும் கேக்கினை செய்தது கிடையாது. ஆனால் எனது முதல் முயற்சியிலேயே அதை சரியாக செய்து முடித்தேன். மேலும் அனுஷ்காவும் அதனை மிகவும் விரும்பினார். இது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றும் என்னிடம் கூறினார்" என்று தெரிவித்துள்ளார்.