ஆஸ்திரேலியாவில் மகளிர் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளை கௌரவிக்கும் வகையில் Women’s Health Women in Sport Awards என்ற விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டின் சிறந்த அணிக்கான விருது ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த அணி கடந்த 12 மாதங்களில் சிறப்பாக செயல்பட்டதால் இந்த விருதை பெற்றுள்ளது.
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி, தொடர்ச்சியாக 18 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று தங்கள் அணியின் முந்தைய சாதனையை தகர்த்தது. ஆஸ்திரேலிய மகளிர் அணி 17 ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றதே சாதனையாக இருந்தது.
அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய மகளிர் அணி டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்துவிதமான ஃபார்மெட்டுகளிலும் விளையாடிய 45 போட்டிகளில் மூன்றில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. மேலும் சமீபத்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடர், கடந்தாண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் கைப்பற்றியது என மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் அந்த அணி சிம்மசொப்பனமாக இருந்து வருகிறது.
மேலும், அணியை சிறந்த முறையில் வழிநடத்தியதற்காக ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மெக் லானிங்கிற்கு லீடர்ஷிப் லெஷன்ட் விருது வழங்கப்பட்டது.