உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் பெருந்தொற்றால் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இப்பெருந்தொற்றால் கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டுள்ளன. இதனால், விளையாட்டு வீரர்கள் குடும்பத்துடன் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
இந்நிலையில், அயர்லாந்து மகளிர் அணிக்கு பேட்டிங் குறித்த பயிற்சிகளை ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டன் மெக் லானிங் ஆன்லைன் மூலம் வழங்கினார். அவருடன் இணைந்த அயர்லாந்து மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் ஐசோபல் ஜாயஸ், பேட்டிங் குறித்து தனது அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.
பெரிய அளவிலான போட்டிகளில் விளையாடுவதற்கு முன் மனரீதியாக எப்படி தயாராக வேண்டும், ஷாட் தேர்வுகள் உள்ளிட்ட ஏராளமான விஷயங்கள் குறித்து இருவரும் தங்களது ஆலோசனை வழங்கினர். அதேசமயம், மெக் லானிங் தான் கடந்தாண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக எவ்வாறு பேட்டிங்கில் சதம் விளாசினேன் என்பது குறித்து வீடியோ மூலம் விவரித்தார்.
இந்த பயிற்சி வகுப்பு அயர்லாந்து மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளர் எட் ஜாய்ஸ் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக மெக் லானிங் தலைமையின் கீழ் ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியாவை வீழ்த்தி ஐந்தாவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சச்சின்!