இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
இதன் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்து முடிந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னிலும், மூன்றாவது போட்டி சிட்னியிலும், நான்காவது போட்டி பிரிஸ்பேனிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் டிசம்பர் 26ஆம் தேதி நடைபெறுகிறது.
சிட்னியில் கடைசி டெஸ்ட்
இதற்கிடையில் தற்போது ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து நகரில் கரோனா தொற்று பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனால் மாநில எல்லைகளை முழுவதும் மூட குயின்ஸ்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் சிட்னியில் இருந்து கிரிக்கெட் வீரர்கள் பிரிஸ்பேன் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியை பிரிஸ்பேனிற்கு பதிலாக சிட்னியில் நடத்தலாம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. ஏனெனில் விளையாட்டு வீரர்களின் நலன் கருதியும், அரசு உத்தரவுகளுக்கு ஏற்றவாறும் நடந்துகொள்ள போட்டிகளை மாற்றியமைப்பது சிறப்பான யோசனையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
அரசிடம் பேச்சுவார்த்தை
இருப்பினும் குயின்ஸ்லாந்து அரசாங்கத்திடம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஜனவரி 8ஆம் தேதி வரை குயின்ஸ்லாந்து எல்லைகள் மூடப்படாமல் இருக்கும் என்பதால், தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெறுவதாற்கான வாய்ப்புகள் உள்ளது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: பாக்ஸிங் டே டெஸ்ட்: வார்னர், அபேட் விலகல்