பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில், 197 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.
அந்த அணியில் ஸ்டீவ் ஸ்மித் 29 ரன்களுடனும், மார்னஸ் லபுசாக்னே 47 ரன்களுடனும் இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர். இதில் சிறப்பாக விளையாடிய லபுசாக்னே மற்றும் ஸ்மித் இருவரும் அரைசதம் கடந்தனர்.
பின்னர் 73 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மார்னஸ் லபுசாக்னே நவ்தீவ் சைனி பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த மேத்யூ வேடும் 4 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த காமரூன் கிரீன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்மித் 81 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த காமரூன் கிரீன் நான்கு சிக்சர்களைப் பறக்க விட்டு அரைசதம் கடந்தார். பின்னர் அவரும் 84 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாக அறிவித்தது. ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழப்பிற்கு 312 ரன்களை எடுத்ததன் மூலம் இந்திய அணிக்கு இலக்காக 407 ரன்களையும் நிர்ணயித்தது.
அதன்பின் இமாலய இலக்கை நோக்கி இந்திய அணி தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா - சுப்மன் கில் களமிறங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: 3ஆவது டெஸ்ட்: தொடக்கத்தில் தடுமாறிய ஆஸி., புத்துணர்ச்சி தந்த ஸ்மித், லபுசாக்னே!