கடந்த சில நாட்களாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் குறித்த செய்திகள்தான் சமூகவலைதளங்களில் அதிகம் காணப்பட்டன. ஏனெனில், லார்ட்ஸில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் அவர் பவுன்சர் பந்தால் தாக்கப்பட்டார். கிரிக்கெட் பந்தை சேதப்படுத்திய சர்ச்சைக்கு பிறகு, ஆஷஸ் தொடரில் இவரது கம்பேக் மெய்சிலிர்க்கும் வகையில் இருந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசி ஆஸ்திரேலிய அணியை வெற்றிபெறச் செய்தார்.
இந்நிலையில், லார்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, இங்கிலாந்து வீரர் ஆர்ச்சர் தனது வேகப்பந்துவீச்சின் மூலம் ஸ்மித்துக்கு தொடர்ந்து அச்சுருத்தலை தந்தார். குறிப்பாக, அவர் வீசிய பவுன்சர் பந்து, ஸ்மித்தின் முழங்கையை தாக்கியது. இதைத்தொடர்ந்து, ஸ்மித் 80 ரன்களுடன் சிறப்பாக பேட்டிங் செய்த போது, மீண்டும் ஆர்ச்சர் வீசிய பவுன்சர் பந்து, ஸ்மித்தின் கழுத்தை பதம் பார்த்தது. 148 கிலோமீட்டர் வேகத்தில் பந்து தாக்கியதால், ஸ்டீவ் ஸ்மித் நிலைதடுமாறி கீழே வீழ்ந்தார்.
இதையடுத்து, பெவிலியன் திரும்பிய அவர், மூளையதர்ச்சி பரிசோதனையில் (Concussion test) பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது. இதனால், மீண்டும் களத்துக்கு திரும்பிய இவர், 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர், அப்போட்டியின் கடைசி நாளின் போது, தனக்கு தலைவலி, மயக்கம் இருப்பதாக அவர் தெரிவித்தார். இதனால், அவருக்கு பதிலாக மார்னஸ் லாபுக்ஸாக்னே மாற்றுவீரராக களமிறங்கினார். இதையடுத்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி டிராவில் முடிந்த நிலையில், மூன்றாவது போட்டி நாளை மறுநாள் லீட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், காயம் காரணமாக ஸ்டீவ் ஸ்மித் மூன்றாவது போட்டியில் பங்கேற்கமாட்டார் என ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் தெரிவித்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித் மூன்று இன்னிங்ஸில் 142, 144, 92 என 328 ரன்களை குவித்துள்ளார். சரிந்துகிடக்கும் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கை மூன்றாவது டெஸ்ட் போட்டியில் யார் தலைநிமர்த்த செய்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.