ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்காக இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் பந்துவீச்சை எதிர்கொள்ள இந்திய வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், “நாதன் லயன் பந்துவீசும் விதத்தைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆஸ்திரேலியாவில் ஆஃப் ஸ்பின் வீசுவது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் அவர் பந்துவீசுவதைப் பார்பதற்கு மிகவும் அழகாக உள்ளது.
அதிலும் அவர் பந்தை பிளைட் செய்யும் விதம், பந்தை ஸ்பின் செய்வது, பவுன்சர் வீசுவது ஆகியவற்றை பார்ப்பதற்கு வியப்பாக உள்ளது. இதனால் அவரது பந்துவீச்சை எதிர்கொள்வது பேட்ஸ்மேன்களுக்கு தடுமாற்றத்தை உண்டாக்கும். தற்போது விளையாடும் எந்த சுழற்பந்துவீச்சாளர்களிடமும் இத்திறமை இல்லை.
அவர் ஒவ்வொரு ஆட்டத்தையும் உணர்ந்து, சூழலிற்கேற்ப பந்துவீசி அணிக்கு பலத்தை சேர்த்து வருகிறார். மேலும் அவருக்கு ஆஸ்திரேலியாவில் எவ்வாறு பந்துவீசுவது என்பது நன்றாக தெரியும். அதனால் இந்திய அணி வீரர்கள் அவரது பந்துவீச்சை எதிர்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பிபிஎல்: அதிரடியில் மிரட்டிய சம்ஸ்; சிட்னி தண்டர் அசத்தல் வெற்றி!