ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் இன்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின்போது இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் காயம் காரணமாகப் போட்டியின் பாதியிலேயே வெளியேறினார். பின்னர் அவருக்கு மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அலுவலர் ஒருவர் கூறுகையில், “உமேஷ் யாதவின் ஸ்கேன் முடிவுகள், அவரது காயம் குறித்து தெளிவாக விளக்குகின்றன. மேலும் அவர் கட்டாயம் இரண்டு வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம்தான்.
மேலும் தற்போது குறைவான பந்துவீச்சாளர்களே அணியில் உள்ளனர். அதனால் ஒருநாள், டி20 தொடரில் சிறப்பாகப் பந்துவீசிய நடராஜனை டெஸ்ட் அணியில் சேர்ப்பது குறித்த ஆலோசனைகள் நடைபெற்றுவருகின்றன” என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன் தங்கராசு, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள், டி20 போட்டிகளில் சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமானார். மேலும் இத்தொடரில் தனது அபார பந்துவீச்சினால் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:‘கோலி இல்லாத நிலையிலும் இந்திய அணியின் செயல்பாடு சிறப்பு’