கரோனா பெருந்தொற்றின் ஆச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து வகையான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் மாதம் முதல் விளையாட்டுப் போட்டிகள் பார்வையாளர்களின்றி நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா-இந்தியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரைக் காண பார்வையாளர்களை அனுமதிக்கவுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முன்னதாக அறிவித்திருந்தது.
அதன்படி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நாளை (நவ.27) நடைபெறவுள்ள இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியின்போது ஐம்பது விழுக்காடு பார்வையாளர்கள் போட்டியைக் காண அனுமதிக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஐம்பது விழுக்காடு பார்வையாளர்களையும், கான்பெர்ராவில் நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டியில் 65 விழுக்காடு பார்வையாளர்களையும் அனுமதிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா-ஆஸ்திரேலிய தொடரை பார்வையாளர்களுடன் நடத்துவதால் நாங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளோம். அதன்படி சிட்னி மைதானத்தில் ஐம்பது விழுக்காடு பார்வையாளர்களையும், கான்பெர்ரா, அடிலெய்டு மைதானங்களில் 65 விழுக்காடு பார்வையாளர்களையும், பிரிஸ்பேன் மைதானத்தில் 75 விழுக்காடு பார்வையாளர்களையும் அனுமதிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
மேலும் பார்வையாளர்களுக்கான டிக்கெட் தொகையாக பெரியவருக்கு 2,200 ரூபாயும், குழந்தைகளுக்கு 730 ரூபாயும் வசூலிக்கப்படவுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:‘கடவுளின் கை’ டியாகோ மாரடோனாவின் வாழ்க்கைப் பயணம்!