ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான நான்கு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டிச.17ஆம் தேதி அடிலெய்டில் தொடங்கிய முதலாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை செய்ய தீர்மானித்தது.
முதல் இன்னிங்ஸில் தடுமாறிய இந்தியா
முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில், பிரித்வி ஷா, மயாங்க் அகர்வால், புஜாரா ஆகியோர் வந்த வேகத்திலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி - ரஹானே இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் கேப்டன் விராட் கோலி அரைசதம் கடந்தும் அசத்தினார்.
பின்னர் 74 ரன்களில் விராட் கோலி ரன் அவுட்டாக, பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். இதனால் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அஸ்வின் பந்து வீச்சால் திணறிய ஆஸ்திரேலியா
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில், ஜோ பர்ன்ஸ், மேத்யூ வேட் ஆகியோர் தலா 8 ரன்களில் பும்ராவிடம் விக்கெட்டை இழந்து வெளியேறினர். அவரைத் தொடர்ந்து வந்த ஸ்டீவ் ஸ்மித்தும் அஸ்வினின் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
தொடர்ந்த வந்த வீரர்களும் அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் டிம் பெய்ன் 73 ரன்களை எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பிய பிரித்வி ஷா
இதைத்தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு மீண்டும் பிரித்வி ஷா, மயாங்க் அகர்வால் இணை தொடக்கம் தந்தது. இந்த இன்னிங்ஸிலும் பிரித்வி ஷா, கம்மின்ஸ் வீசிய பந்தில் கிளீன் போல்டாகி ஏமாற்றினார். இதையடுத்து மயாங்க் அகர்வாலுடன், நைட் வாட்ச்மேனாக ஜஸ்பிரித் பும்ரா களமிறங்கினார்.
இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்களை எடுத்தது. இதன் மூலம் 62 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணி தரப்பில் மயாங்க் அகர்வால் 5 ரன்களுடனும், ஜஸ்பிரித் பும்ரா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த இந்தியா
இதைத்தொடர்ந்து இன்று(டிச.19) தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில், இந்திய அணியின் பும்ரா 2 ரன்களிலும், மயாங்க் அகர்வால் 9 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த அனுபவ வீரர்கள் புஜாரா, கேப்டன் கோலி, ரஹானே ஆகியோரும் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்ப இந்திய அணி 26 ரன்களுக்குள்ளாகவே 7 விக்கெட்டுகளை இழந்தது.
அவர்களைத் தொடர்ந்து வந்த விஹாரி, சஹா, அஸ்வின் ஆகியோரும் ஆட்டமிழந்தனர். இறுதியாக உமேஷ் யாதவுடன் ஜோடி சேர்ந்த ஷமி, ஹசில்வுட் வீசிய பந்தில் காயமடைந்து, ஆட்டத்தின் பாதியிலேயே வெளியேறினார். இதனால் இந்திய அணி 36 ரன்களுக்கு டிக்ளர் செய்ததாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகக்குறைந்த ரன்களை எடுத்த அணி என்ற மோசமான சாதனையையும் இந்திய அணி படைத்தது.
மேலும் இப்போட்டியில் விளையாடிய இந்திய வீரர்களில் எவரும் இரட்டை இழக்க ரன்களை எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா அபார வெற்றி
பின்னர், 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கும் தொடக்க வீரர்கள் மேத்யூ வேட் - ஜோ பர்ன்ஸ் இணை சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இதில் மேத்யூ வேட் 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பெவிலியன் திரும்ப, அவரைத் தொடர்ந்து வந்த லபுசாக்னேவும் 6 ரன்களுக்கு நடையைக் கட்டினார்.
இருப்பினும் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோ பர்ன்ஸ் அரைசதம் கடந்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோ பர்ன்ஸ் 51 ரன்களை எடுத்தார்.
இதையும் படிங்க:ஆஸ்திரேலியன் ஓபன்: வீரர்களுக்கு தனிமைப்படுத்துதல் காலம் கட்டாயம்!