அடிலெய்டில் நேற்று தொடங்கிய இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 233 ரன்களை எடுத்திருந்தது. இதையடுத்து இன்று 2ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி 244 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகி, முதல் இன்னிங்ஸை முடித்தது. இந்திய அணி தரப்பில் விராட் கோலி 74 ரன்களை எடுத்தார்.
தொடக்கத்திலேயே தடுமாறிய ஆஸ்திரேலியா:
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க வீரர்கள் மேத்யூ வேட், ஜோ பர்ன்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த ஏமாற்றமளித்தனர்.இதனால் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்களை இழந்தது.
ஆஸ்திரேலியர்களை வீழ்த்திய அஸ்வின் சுழல்
அதன்பின் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது முதல் ஓவரிலேயே ஸ்டீவ் ஸ்மித்தை வழியனுப்பி வைத்தார். அதன்பின் கிரீன், டிராவிஸ் ஹெட் ஆகியொரையும் அடுத்தடுத்து வீழ்த்தி, ஆஸ்திரேலிய அணியை நிலைகுலையச் செய்தார்.
இதற்கிடையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த லபுசாக்னே 47 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
தனி ஒருவனாக போராடிய டிம் பெய்ன்:
அதன்பின் களமிறங்கிய டிம் பெய்ன் ஒருபுறம் பவுண்டரிகளை விளாசி ஸ்கோரை உயர்த்த, மறுமுனையில் களமிறங்கிய கம்மின்ஸ், ஸ்டார்க், லயன் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டிம் பெய்ன் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் ஜோஷ் ஹசில்வுட் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் உமேஷ் யாதவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் டிம் பெய்ன் 73 ரன்களை குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.
2ஆவது இன்னிங்ஸிலும் ஏமாற்றிய பிரித்வி ஷா:
இதைத்தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு மீண்டும் பிரித்வி ஷா, மயாங்க் அகர்வால் இணை தொடக்கம் தந்தது. இந்த இன்னிங்ஸிலும் பிரித்வி ஷா, கம்மின்ஸ் வீசிய பந்தில் கிளீன் போல்டாகி ஏமாற்றினார்.
இதையடுத்து மயாங்க் அகர்வாலுடன், நைட் வாட்மேனாக ஜஸ்பிரித் பும்ரா களமிறங்கினார். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்களை எடுத்தது.
இதன் மூலம் 62 ரன்கள் முன்னிலையும் பெற்றுள்ளது. இந்திய அணி தரப்பில் மயாங்க் அகர்வால் 5 ரன்களுடனும், ஜஸ்பிரித் பும்ரா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க:சயீத் முஷ்டாக் அலி தொடருக்கான மைதானங்கள் அறிவிப்பு!