இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
அதன்படி ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஆரோன் ஃபின்ச் - மேத்யூ வேட் இணை களமிறங்கியது. காயம் காரணமாக கடந்த போட்டியில் விளையாடமலிருந்த ஃபின்ச், இப்போட்டியில் தனது இரண்டாவது பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த வேட் - ஸ்மித் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த அடித்தளமிட்டனர். இதன் மூலம் முதல் ஆறு ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 51 ரன்களை குவித்தது. இதையடுத்து ஸ்மித் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மேக்ஸ்வெல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணி பந்துவீச்சாளர்களை திணற செய்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த மேத்யூ வேட் இப்போட்டியிலும் அரைசதம் கடந்து அசத்தினார்.
இதற்கிடையில் நடராஜன் வீசிய இரண்டாவது ஓவரின்போது மேக்ஸ்வெல்லிற்கு வீசப்பட்ட பந்து எல்.பி.டபிள்யூவானது. இதையடுத்து இந்திய வீரர்கள் விக்கெட்டிற்கு முறையிட்டனர். ஆனால் ஆட்டநடுவர் விக்கெட் தர மறுத்துவிட்டார். பின்னர் இந்திய அணி டி.ஆர்.எஸ் முறையை நாடினார். மூன்றாம் நடுவரும் அதற்கு தயாரானார். ஆனால் டி.ஆர்.எஸ் எடுப்பதற்கு இந்திய அணியினர் அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், அது செல்லாது என போட்டி நடுவர்கள் அறிவித்தனர். இதனால் மைதானத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.
அதன்பின் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை மிரட்டினார். மேலும் 31 பந்துகளில் அரைசதம் கடந்தும் அசத்தினார். பின்னர் 80 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மேத்யூ வேட் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மேத்யூ வேட் 80 ரன்களையும், மேக்ஸ்வெல் 54 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் இரண்டு விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர், நடராஜன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையும் படிங்க:‘நாட்டிற்காக தொடரை வென்றுகொடுத்தது சிறப்பான தருணம்’: நடராஜன்