இந்தாண்டு இறுதியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, ஒருநாள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இத்தொடருக்கான இந்திய அணி கடந்த திங்கள்கிழமை பிசிசிஐ அறிவித்தது. விராட் கோலி தலைமையிலான ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான துணை கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின், ஆஸ்திரேலிய அணிகெதிரான இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். ஆனால் அஸ்வினை ஏன் ஒருநாள், டி20 போட்டிகளுக்கான அணியில் இடமளிக்கவில்லை என கிரிக்கெட் வல்லுநர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
காரணம், ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் அஸ்வின் நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பாக பந்துவீசி அசத்தி வருகிறார். அதிலும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை அசால்டாக கைப்பற்றி கலக்குகிறார். மேலும் அவரது பந்துவீச்சில் ரன்களையும் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளார்.
அப்படி இருக்கும் போது அஸ்வினை நீங்கள் ஏன் குறுகிய ஓவர்கள் கொண்ட இந்திய அணியில் சேர்க்கவில்லை. ஆஸ்திரேலிய மண்ணில் அஸ்வினின் பந்துவீச்சு இந்திய அணிக்கு பெரும் பயணாக அமையும். இது தெரிந்திருந்தும் அவருக்கு அணியில் இடமளிக்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிசந்திரன் அஸ்வின், இதுவரை 71 டெஸ்ட், 111 ஒருநாள், 46 டி20 போட்டிகளில் பங்கேற்று 600க்கும் அதிகமான விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இங்., ஆஸி., பாக்., இலங்கை அணிகளுக்கு எதிராக தெ.ஆப்பிரிக்கா மோதும் போட்டி அட்டவணை!