கரோனா வைரஸ் காரணமாக முடங்கியிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள், இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரினால் மீண்டும் புத்துயிர் பெற தொடங்கியுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த எட்டாம் தேதி முதல் தொடங்கியது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முடிவுக்கு பின் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், பாதுகாப்பு விதிகளை மீறி தனது வீட்டிற்கு சென்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆர்ச்சரின் இச்செயலால் அணியின் மற்ற வீரர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதினால், தற்போது அவரை மீண்டும் தனிமைப்படுத்தி, கரோனா கண்டறிதல் சோதனையை மேற்கொள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (இசிபி) உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து அணியின் நிர்வாக இயக்குநர் ஆஷ்லே கில்ஸ்(Ashley Giles) கூறுகையில், 'ஆர்ச்சரின் இந்த நடவடிக்கையானது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு பேரிழப்பை ஏற்படுத்தியிருக்கும். இதன் விளைவுகளால் எங்களுக்கு பல லட்சம் பவுண்டுகள் வரை இழப்புகள் ஏற்பட்டிருக்கும். இளம் வீரர்கள் தவறு செய்வது வழக்கமான ஒன்றுதான். அவர் தற்போது தனது செயலால் ஏற்படவிருந்த ஆபத்தை உணர்ந்திருப்பார் என்று நம்புகிறேன். இருப்பினும் விதிகளை மீறிய ஆர்ச்சர் மீது, இசிபி ஒழுங்கு சார்ந்த நடவடிக்கையை எடுக்கும்' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த ஆர்ச்சர், விதிகளை மீறிய குற்றத்திற்காக அணியிலிருந்து நீக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளவிருக்கும் கரோனா கண்டறிதல் சோதனையின் முடிவில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதியானால் மட்டுமே மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இடம் பெறுவார் என இசிபி தெரிவித்துள்ளது.