கரோனா வைரஸ் (தீநுண்மி) காரணமாக மார்ச் 29ஆம் தேதி தொடங்கவிருந்த 13ஆவது ஐபிஎல் சீசன் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இப்பெருந்தொற்றால் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை தொடர் பெரும்பாலும் தள்ளிவைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் இது குறித்த முடிவை ஐசிசி இன்று நடத்தும் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தெரிவிக்கவுள்ளது. ஒருவேளை, டி20 உலகக்கோப்பைத் தொடர் ஒத்திவைக்கப்பட்டால் ஐபிஎல் தொடர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இந்தாண்டில் ஐபிஎல் தொடர் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர்களான அனில் கும்ப்ளே, விவிஎஸ் லக்ஷ்மண் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஐசிசி குழுவின் தலைவரும் முன்னாள் இந்திய வீரருமான அனில் கும்ப்ளே கூறுகையில், "அட்டவணையை மாற்றியமைத்தால் இந்தாண்டு இறுதியில் ஐபிஎல் தொடர் நடைபெறும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.
ஒருவேளை பார்வையாளர்களின்றி இந்தத் தொடரை நடத்த முடிவு எடுத்தால், நான்கு அல்லது ஐந்து இடங்களில் போட்டிகளை நடத்தலாம்" என்றார்.
இதேபோல் விவிஎஸ் லக்ஷ்மண் கூறுகையில், "இதற்கு அனைத்து பங்குதாரர்களும் தங்களது கருத்தை தெரிவிக்க வேண்டும். ஐபிஎல் தொடரை நான்கு அல்லது ஐந்து இடங்களில் நடத்தலாம் என அனில் கும்ப்ளே குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு இது சவலாக இருக்கும் என்பதால் மூன்று அல்லது நான்கு மைதானங்கள் கொண்ட ஒரே இடத்தில் ஐபிஎல் தொடரை நடத்தலாம்" என்றார்.
இதையும் படிங்க: என்னை நினைவுப்படுத்திய லாரா மகன் - சச்சின் பகிர்ந்த நாஸ்டால்ஜியா புகைப்படம்