இந்தியாவின் ஐபிஎல் தொடரைப் போன்றே பாகிஸ்தானில் நடத்தப்பட்டுவரும் உள்ளூர் டி20 தொடர் பாகிஸ்தான் சூப்பர் லீக். இத்தொடரின் ஐந்தாவது சீசன் கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சமீபத்தில் நடந்து முடிந்தது.
இத்தொடரின் இறுதிப் போட்டியில் கராச்சி கிங்ஸ் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணியை வீழ்த்தி, தனது முதல் பிஎஸ்எல் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது.
இதனையடுத்து கராச்சி கிங்ஸ் அணியின் உரிமையாளர் சல்மான் இக்பால், தனது ரியல் எஸ்டேட் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் கராச்சி கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற உதவிய அணியின் அனைத்து வீரர்களுக்கு ஒரு குடியிருப்பை பரிசாக வழங்கியுள்ளார். இத்தகவலை பாகிஸ்தான் பத்திரிகையாளர் உமர் ஆர் குரைஷி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
உமர் ஆர் குரைஷி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், `கராச்சி கிங்ஸ் உரிமையாளர் சல்மான் இக்பால் பி.எஸ்.எல் வென்ற கராச்சி கிங்ஸ் அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் தனது ரியல் எஸ்டேட் மேம்பாட்டு திட்டமான ஆரி லாகுனா (ARY Laguna) திட்டத்தின்கீழ் ஒரு குடியிருப்பை வழங்குகிறார்` என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாம் இடம் பிடித்த சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணியினருக்கு தலா ஒரு குடியிருப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.