பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் முகமது அமீர். இவர், டிசம்பர் 17ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். மேலும், தனது ஓய்வு முடிவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கொடுத்த அழுத்தமே காரணம் என்றும் தெரிவித்திருந்தார்.
குற்றஞ்சாட்டும் அமீர்
இதையடுத்து இளம் வயதில் நான் ஓய்வை அறிவிக்க பாகிஸ்தான் அணியின் நிர்வாகம் எனக்கு கொடுத்த அழுத்தமும், மன உளைச்சலும் தான் காரணம் என முகமது அமீர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து பேசிய அமீர், "நான் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட விரும்பவில்லை என்றும், பணம் சம்பாதிக்க டி20 லீக்கில் மட்டுமே விளையாட விரும்புகிறேன் என்றும் பாகிஸ்தான் அணி நிர்வாகம் என்மீது பழி சுமத்தியது. மேலும், என்னுடைய பெயரை பொதுவெளியில் கெடுக்க முயற்சிக்கின்றனர்.
இதனால்ஸ தான் ஓய்வு முடிவை அறிவித்தேன். இந்த முடிவை எடுக்க நான் மிகவும் கஷ்டப்பட்டேன். ஆனால் என்னால் அவர்கள் கொடுக்கும் அழுத்ததில் அமைதியாக இருக்க முடியவில்லை. அதனால் தான் எனது ஓய்வு மூலம், இங்கு என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு தெரிய முயற்சித்தேன்" என்று தெரிவித்தார்.
இளம் வயதில் ஓய்வு
தற்போது 28 வயதாகும் முகமது அமீர், பாகிஸ்தான் அணிக்காக 32 டெஸ்ட், 60 ஒருநாள், 50 டி20 போட்டிகளில் விளையாடி 259 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். முன்னதாக, இவர் கடந்தாண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கொலோன் உலகக் கோப்பை: 9 பதக்கங்களை வென்றது இந்தியா!