இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உள்ளூர் போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியதற்காக சென்ட்ரல் பஞ்சாப் அணியின் கேப்டனும் பாகிஸ்தான் தொடக்க வீரருமான அஹ்மத் சேஷாத்திற்கு போட்டியின் ஊதியத்திலிருந்து 50 விழுக்காடு அபராதம் விதிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் உள்ளூர் கிரிக்கெட் தொடரான குவாத் - ஈ - அஸாம் டிராபிக்காக போட்டியில் சென்ட்ரல் பஞ்சாப் - சிந்த் அணிகள் விளையாடின. அந்தப் போட்டியின் 17ஆவது ஓவரின்போது, கள நடுவர் பந்தை பரிசோதிக்கையில், பந்து சேதமானது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் களநடுவர்கள் இது குறித்து ஆட்ட நடுவரிடம் புகார் கொடுத்தனர். பின்னர் பாகிஸ்தான் விதிகளின்படி இந்த விவகாரம் குறித்து சென்ட்ரல் பஞ்சாப் அணி கேப்டன் சேஷாத் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து இந்த விவகாரம் குறித்த விசாரணையில் ஷேஷாத் ஆஜரானார்.
அந்த விசாரணையில் கேப்டன் சேஷாத், பந்து இயற்கையாகவே சேதமடைந்தது. இது குறித்து நான் களநடுவர்களை சமாதானப்படுத்த முயன்றேன். இப்போது களநடுவர்களின் முடிவை மதித்து ஏற்றுக்கொள்கிறேன் என்றார். அதையடுத்து கேப்டன் சேஷாத் இந்த விவகாரத்தில் ஈடுபடவில்லை என்றும், தனது அணியினரை பந்தை சேதப்படுத்தவிடாமல் தடுக்ககாததால் அவருக்கு அபராதம் விதிக்கப்படுவதாக உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து சேஷாத் பேசுகையில், இதுபோன்ற கீழ்த்தரமான சம்பவங்களில் நான் ஒருபோதும் ஈடுபடமாட்டேன். எப்போதும் போட்டி மனப்பானமையுடன் திறமையை வெளிப்படுத்தி வெற்றிபெறவே ஆசைப்படுவேன் என்றார்.
ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்தியதற்காக ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித், வார்னர், பேன்கிராஃப்ட் ஆகியோருக்கு தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியா vs வங்கதேச டெஸ்ட் போட்டிக்கு சச்சினை எப்படியாது அழைத்துவருவோம் - கங்குலி