வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடிவருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி ரஹ்மத் ஷா, அஸ்கார் ஆப்கன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸில் 342 ரன்கள் சேர்த்தது. ரஹ்மத் ஷா சதமடித்ததன் மூலம் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும், கேப்டன் ரஷீத் கானும் அரைசதம் அடித்திருந்தார்.
![சதமடித்த ரஹ்மத் ஷா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4370286_gaas-1.jpeg)
அதன்பின் பேட்டிங் செய்த வங்கதேச அணி ரஷீத் கான், முகமது நபி ஆகிய இருவரின் சுழலில் சிக்கித் திணறியது. அந்த அணியில் மொமினுல் ஹக் மட்டும் அதிகபட்சமாக 52 ரன்கள் அடித்தார். அவரைத் தொடர்ந்து ஹுசைன், லிட்டான் தாஸ் ஓரளவு தாக்குப் பிடித்தாலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. முடிவில், வங்கதேச அணி 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷீத் கான் ஐந்து விக்கெட்டுகளும், முகமது நபி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
137 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் சதமடித்த ரஹ்மத் ஷா இரண்டாவது இன்னிங்ஸில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
![பந்தை எடுக்க ஓடும் வங்கதேச வீரர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4370286_gaas-3.jpg)
இந்நிலையில், வங்கதேசத்தைவிட ஆப்கானிஸ்தான் அணி 374 ரன்கள் முன்னிலையில் இருந்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுற்றது. வங்கதேச அணி தரப்பில் அந்த அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.