இங்கிலாந்தில் நடத்தப்படும் டி20 பிளாஸ்ட் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற மிடில்செக்ஸ் அணி எசக்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய எசக்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரியன் டென் டோஸ்சடே இறுதி வரை ஆட்டமிழக்காமல் 74 ரன்களை குவித்தார். மிடில்செக்ஸ் பந்துவீச்சில் டாம் ஹெல்ம் 3, நேதன் சோவ்டர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய மிடில்செக்ஸ் அணியின் தொடக்க வீரர் பால் ஸ்ரில்லிங் 10, நிக் கப்பின்ஸ் 12 எடுத்து வெளியேறினர். பின்னர் கேப்டன் டேவிட் மாலன் உடன் ஜோடி சேர்ந்த ஏபிடிவில்லியர்ஸ் தனது அதிரடி ருத்ரதாண்டவத்தை வெளிப்படுத்தினார். இதனால் மிடில் செக்ஸ் அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
டிவில்லியர்ஸ் 43 பந்துகளில் 88 ரன்கள் (5 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன டிவில்லியர்ஸ் கடந்த மே மாதம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற தொடரில் டிவில்லியர்ஸ் அணிக்கு வரவேண்டும் என விருப்பம் தெரிவித்தாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கூறியது.
இது டிவில்லியர்ஸ் மீது விமர்சனங்களுக்கு காரணமாக அமைந்தது. ஆனால் அதை டிவில்லியர்ஸ் தற்போது மறத்துள்ளார். தனது ஓய்வுக்கு பிறகு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கும் எந்த ஒப்பந்தமும் இல்லை என்றும், தான் யாரிடமும் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.