அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் கடந்த மே 25ஆம் தேதி கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர் காவல் துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு, உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்காவில் இனவாதத்திற்கு எதிராகப் போராட்டம் தீவிரமடைந்துவருகிறது. உலகின் பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிராக கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரராக வலம் வந்த ஆகாஷ் சோப்ரா, இங்கிலாந்து கிரிக்கெட் தொடரின் போது தானும் இனவெறிக்கு உள்ளானதாக சமூக வலைதளத்தில் மனம் திறந்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "கிரிக்கெட் வீரர்களான நாங்களும் ஒரு காலத்தில் இனவெறி என்னும் கொடுமையான விஷயத்திற்கு ஆளாகினோம். நான் இங்கிலாந்து லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடிய போது, எதிரணியை சேர்ந்த இரு தென்ஆப்பிரிக்க வீரர்கள் என்னை 'பாக்கி' என்று அழைத்தனர்.
பாகிஸ்தானின் குறுகிய வடிவம் பாக்கி என்று இப்போதும் பலர் நம்புகிறார்கள், ஆனால் அது உண்மையல்ல. நீங்கள் பழுப்பு நிறமுள்ளவராக இருந்தால் உங்களை வெளிநாட்டவர் 'பாக்கி' என்று அழைப்பார்கள். நீங்கள் ஆசியாவில் எங்கிருந்து சென்றாலும் பிற வெளிநாட்டினர் உங்களை 'பாக்கி' என்றே அழைப்பர். ஆனால் அவர்கள் என்னை அப்படி அழைக்கும் போது எனது அணி எனக்கு உறுதுணையாக இருந்து அனைத்து விஷயங்களிலும் செயல்பட்டது" என்று தெரிவித்தார்.
முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி, ஐபிஎல் தொடரின்போது தான் இனவெறி சர்ச்சைக்கு உள்ளானதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.