இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று (மார்ச் 14) அகமதாபாத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து அணியை பேட்டிங்செய்ய அழைத்தார்.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் சந்தித்த முதல் பந்திலேயே புவனேஷ்வர் குமாரிடம் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஜேசன் ராய் - டேவிட் மாலன் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். பின் 24 ரன்கள் எடுத்திருந்த டேவிட் மாலன், யுஸ்வேந்திரன் சஹால் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஜேசன் ராய் - ஜானி பேர்ஸ்டோவ் இணை அதிரடியாக விளையாடி அணிக்கு வலிமை சேர்த்தது. அதன்பின், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜேசன் ராய் 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில், வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் புவனேஷ்வர் குமாரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதையடுத்து ஜானி பேர்ஸ்டோவும் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை குவித்தது.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜேசன் ராய் 46 ரன்களையும், ஈயன் மோர்கன் 28 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இதையும் படிங்க: இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா!