கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலக நாடுகள் முழுவதும் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. மேலும் இப்பெருந்தொற்றின அச்சுறுத்தலினால் ஒலிம்பிக், விம்பிள்டன், ஐபிஎல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இந்தாண்டு அக்டோபர் மாதம் டி20 உலகக்கோப்பை தொடரை நடத்துவதாக ஐசிசி திட்டமிட்டிருந்தது. தற்போது பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாலும், வீரர்களும் தங்களது பயிற்சிகளுக்கு திரும்பாத காரணத்தினாலும், டி20 உலகக்கோப்பை தொடரை ஒத்திவைக்கும் முடிவிற்கு ஐசிசி ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
இதனிடையே, ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பையை குறித்த நேரத்தில் நடத்த முடியாது என்பதால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அத்தொடரை ஒத்திவைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐசிசி விரைவில் வெளியிடுமென்றும் தகவல் கிடைத்துள்ளது.
தற்போது ஐசிசியின் இந்த முடிவு உண்மையாகும் பட்சத்தில், இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் இந்தாண்டு இறுதிக்குள் நடத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் உலகக்கோப்பை தொடரை ஐசிசி ஒத்திவைப்பதினால், அது ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியங்களின் தலைவலியை இன்னும் அதிகமாக்கும் என்ற அச்சமும் நிலவுகிறது. ஏனெனில், உலகக்கோப்பை போன்ற தொடர்களை நடத்தும் நாட்டின் கிரிக்கெட் வாரியங்களுக்கு அது மிக அதிக நிதியைக் கொடுக்கும் தொடராக அமையும்.
அதனால் இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை தொடர் ஒத்திவைக்கப்படும் பட்சத்தில், அடுத்த ஆண்டு இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த உலகக்கோப்பை தொடரும் ஒத்திவைக்கப்படும். இதனால் இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:இம்ரான் கான் ஆக பாபர் அசாமுக்கு அக்தர் யோசனை!