கொல்கத்தா: அவிஷேக் டால்மியாவுக்கு நடத்திய சோதனைக்குப் பின் அவருக்கு கோவிட்-19 நேர்மறை (COVID-19 positive) இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அவர் இன்று (ஜனவரி 4) உட்லேண்ட்ஸ் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்குத் தொற்று இருப்பது திங்கள்கிழமையன்று (ஜனவரி 3) தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு மோனோகுளோனல் ஆன்ட்டிபாடி காக்டெய்ல் தெரபி அளிக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
மேலும் சில வீரர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் முதல் நிலை, இரண்டாம் நிலை, மாவட்ட அளவிலான உள்ளூர் போட்டிகள் நிறுத்திவைக்கப்படும் என பெங்கால் கிரிக்கெட் சங்கம் இன்று அறிவித்துள்ளது.
தற்போதைய தொற்றின் தீவிரத்தைக் கணக்கில்கொண்டு, பெங்கால் கிரிக்கெட் சங்கம் அனைத்து பெங்கால் கிரிக்கெட்டர்களுக்கும் ஆர்டி-பிசிஆர் சோதனை நடத்தியது. இதையடுத்து, அச்சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், "முடிவுகள் வந்துவிட்டன, குறிப்பிட்ட சில வீரர்களுக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெங்கால் கிரிக்கெட் சங்கம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
15-18 வயதுடையோருக்குத் தடுப்பூசி
மேலும், தேவையான முடிவுகளை எடுக்கவும், தற்போதைய கோவிட் நிலைமையை மதிப்பாய்வு செய்யவும் அவசரநிலை உச்ச கவுன்சில் கூட்டப்பட்டுள்ளதாகவும் பெங்கால் கிரிக்கெட் சங்கம் அறிவித்தது.
"கிரிக்கெட் வீரர்களின் உடல்நலம், பாதுகாப்பு சங்கத்திற்கு முக்கியம் என்பதால் 15-18 வயதிற்குள்பட்ட பதிவுசெய்யப்பட்ட வீரர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு பெங்கால் கிரிக்கெட் சங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறது" என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தெலங்கானா பாஜக தலைவர் கைது: ஹைதராபாத்தில் நட்டா...!