கெட்டோ எனும் சமூக வலைத்தளத்தின் மூலம் #InThisTogether என்ற நிதிதிரட்டும் திட்டத்தை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் தொடங்கியுள்ளனர். கரோனா நிவாரண நிதியாக ரூ.7 கோடி திரட்ட முடிவு செய்தனர். அதில் முதல்கட்டமாக தங்கள் பங்களிப்பாக ரூ. 2 கோடியை வழங்கியுள்ளனர்.
இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில், விராட் கோலி கூறியிருப்பதாவது, "நமது நாட்டின் வரலாற்றில் நாம் இதற்கு முன்னெப்போதும் இல்லாத நாட்களை கடந்து வருகிறோம், அனைவரும் ஒன்று சேர்ந்திருந்து, பலரின் உயிரைக் காப்பதுதான் தேசத்துக்கு அவசியம். கடந்த ஆண்டிலிருந்து மக்கள் சந்தித்துவரும் துன்பங்களை பார்த்து நானும் அனுஷ்காவும் அதிர்ச்சி அடைந்துள்ளோம்.
கரோனாவுக்கு எதிரான போரில் கடந்த ஆண்டிலிருந்து நானும், அனுஷ்காவும் எங்களால் முடிந்த அளவு பலருக்கும் தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறோம். இந்தியாவுக்கு அதிகமான ஆதரவு தேவைப்படுகிறது. மிகுந்த நம்பிக்கையுடன் இந்த நிதி திரட்டும் பரப்புரையை தொடங்கியுள்ளோம். முடிந்தவரை அதிகமான பணத்தை திரட்ட முடியும் என நம்புகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதே போல, அனுஷ்கா சர்மா கூறுகையில், “கரோனாவினால் மனிதர்கள் படும் அவதியையும் துன்பத்தையும் பார்த்து நானும் விராட்டும் ஆழ்ந்த வேதனை அடைந்தோம். இந்த நிதி கரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்துக்கு உதவும் என்று நம்புகிறோம்." என்றார்.