மும்பை : இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா கடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் உள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது காலில் ஏற்பட்ட காயத்தால் ஹர்திக் பாண்டியா விலகினார்.
அதன்பின் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் அவரது பெயர் அணியில் இடம் பெறவில்லை. சிகிச்சைக்கு பின்னர் தேறி வரும் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் களமிறங்குவது எப்போது என ரசிகர்கள் தொடர் கேள்விகளை எழுப்பி வந்தனர்.
காயத்தில் இருந்து குணமடைந்து வரும் ஹர்திக் பாண்ட்யா நேரடியாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தான் களமிறங்குவார் என்று தகவல்கள் பரவி வருகின்றன. அதுவரை இந்திய டி20 கிரிக்கெட் அணிக்கு சூர்யகுமார் யாதவ் தான் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிகிறது. இதனிடையே ஹர்திக் பாண்ட்யாவுக்கு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமியில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா எப்போது அணிக்கு திரும்புவார் என்பது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தகவல் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா அணிக்கு திரும்பலாம் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்து உள்ளார்.
தென் ஆப்பிரிக்கா சுற்றுப் பயணம் முடிவடைந்ததும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில், அந்த தொடரில் ஹர்த்திக் பாண்ட்யா அணியை வழிநடத்துவார் எனத் தெரிகிறது.
அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில், அதற்கு பயிற்சி மேற்கொள்ளும் வகையில் இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட திட்டமிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் ஒப்பந்தம் நீட்டிப்பு தொடர்பாக தென் ஆப்பிரிக்க தொடருக்கு பின்னர் இறுதி செய்யப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார்.
இதையும் படிங்க : முன்னாள் கால்பந்து வீரர் ஓலே குன்னர் சோல்ஸ்கேர் இந்தியச் சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு..!