மெல்போர்ன்: இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்ணையில் பாலஸ்தீன மக்களுக்கு ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா ஆதரவு தெரிவிக்கும் வகையில், வாசகங்களுடன் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். ஆனால் ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) உஸ்மான் கவாஜாவின் செயல் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டது என கூறி பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வாசகங்களைக் களத்தில் பயன்படுத்தக் கூடாது என மறுத்தது.
உஸ்மான் கவாஜா தனது காலணியில் All lives are equal, Freedom is a human rights (அனைவரும் சமம், சுதந்திரம் மனிதர்களின் உரிமை) என்ற வாசகத்தை பாலஸ்தீன தேசியக் கொடி நிறங்களான சிகப்பு, பச்சை மற்றும் கருப்பு நிறங்களில் தனது காலணியில் எழுதியிருந்தார். அதேபோல் தனது பேட் மற்றும் காலணியில் அமைதியைக் குறிக்கும் புறவின் ஸ்டிக்கரையும் ஒட்டியிருந்தார். இதற்குத்தான் ஐசிசி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
முன்னதாக இது குறித்து கவாஜா கூறுகையில், "நான் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பார்க்கும் போது, இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையேயான பிரச்ணையில் உயிரிழந்த அப்பாவி குழந்தைகளைப் பார்க்கும் போது எனது நெஞ்சம் பதைபதைத்தது. என்னால் தாங்கமுடியவில்லை. நான் அழகான நாட்டில் வசிக்கிறேன். நானும் என் குழந்தைகளும் சுதந்திரமாக வெளியே நடக்கிறோம். இந்த நிலை உலகம் முழுவதும் இருக்க வேண்டும்" என கவாஜா கூறியிருந்தார்.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நாளை (டிச.26) தொடங்குகிறது. இந்த நிலையில் தான் ஆஸ்திரேலியா கேப்டன் பேட்டி அளிக்கும் போது கவாஜாவுக்கு ஆதரவு தெரிவித்தார். இது குறித்து அவர் பேசுகையில், "நாங்கள் உஸ்மான் கவாஜாவை ஆதரிக்கிறோம். அவர் எதை நம்புகிறாரோ அதற்கு ஆதரவாக நிற்கிறோம். அவர் அதை மிகவும் மரியாதையான முறையில் தான் செய்துள்ளார் என நான் நினைக்கிறேன். அனைவரும் சமம் எனச் செல்வது ஒன்றும் ஆபத்தான கருத்து இல்லை.
ஆனால், ஐசிசி இதை அனுமதிக்கவில்லை. அவர்கள் சில விதிமுறைகள் வைத்திருக்கின்றனர். அதற்கு ஏற்ப நாம் இணங்கித் தான் செல்ல வேண்டும். இது குறித்து நான் கவாஜாவிடம் பேசினேன். இதற்கு மேல் இந்த விஷயத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை. மேலும், அவர் அனைவரும் சமம் என்று நினைக்கிறார் அவ்வளவு தான்" என்றார்.
இதையும் படிங்க: அர்ஜுனா விருதுக்குத் தேர்வான லான் பவுல்ஸ் வீராங்கனை..! யார் இந்த பிங்கி சிங்..?