துபாய்: ஆசிய கோப்பை 2022 தொடரின் 'சூப்பர்-4' சுற்றில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று (செப். 4) விளையாடி வருகின்றன. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தார்.
மிரட்டல் தொடக்கம்: தொடர்ந்து, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, துணை கேப்டன் கே.எல். ராகுல் ஆகியோர் அதிரடி தொடக்கத்தை அளித்தனர். நசீம் ஷா, முகமது ஹஸ்னைன், ஹரிஸ் ரவுஃப், முகமது நவாஸ் ஆகியோரின் முதல் 5 ஓவர்களில் இந்த இணை 54 ரன்களை குவித்து மிரட்டியது. குறிப்பாக, இருவரும் தலா 2 சிக்ஸர்களை பறக்கிவிட்டு பவர்பிளேவில் ரன்களை குவித்தனர்.
இருப்பினும், பவர்பிளேயின் கடைசி ஓவரான 6ஆவது ஓவரின் முதல் பந்தில், ரோஹித் சர்மா குஷ்திலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 16 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உள்பட 28 ரன்களை எடுத்திருந்தார். தொடர்ந்து, 7ஆவது ஓவரின் முதல் பந்தில் மற்றொரு ஓப்பரான கே.எல். ராகுல் 28(20) ரன்களில் ஆட்டமிழந்தார்.
32ஆவது அரைசதம்: விராட் கோலி நிதானம் காட்டிய நிலையில், சூர்யகுமார் 13(10) ரன்களிலும், பந்த் 14(12) ரன்களிலும், ஹர்திக் பாண்டியா ரன் ஏதும் இன்றியும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். கவனமாக ஆடி வந்த கோலி, தனது 36ஆவது பந்தில், சிக்சரை பறக்கவிட்டு டி20 அரங்கில் தனது 32ஆவது அரைசதத்தை பதிவுசெய்தார். மேலும், ஹாங்காங் உடனான கடந்த போட்டியிலும் அவர் அரைசதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கோலியுடன் சற்றுநேரம் தாக்குபிடித்த தீபக் ஹூடா 16 (14) ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, கடைசி ஓவரில் விராட் கோலி முதல் மூன்று பந்துகளில் ஒரு ரன்னுக்குக் கூட ஓடாத நிலையில், நான்காவது பந்தில் இரண்டு ரன்களுக்கு ஓட முயற்சித்து ரன் அவுட்டாகி வெளியேறினார். அவர் 44 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்ஸர் என 60 ரன்களை குவித்தார்.
182 ரன்கள் இலக்கு: கடைசி 2 பந்துகளில், ஃபக்கார் ஜமானின் மோசமான பீல்டிங்கால் ரவி பிஷ்னோய் இரண்டு பவுண்டரிகளை இந்திய அணியின் கணக்கிற்கு சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்களை எடுத்தது. இதில், 16 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடக்கம்.
பாகிஸ்தான் பந்துவீச்சு தரப்பில் ஷடாப் கான் 2 விக்கெட்டுகளையும், நவாஸ், ரவுஃப், ஹஸ்னைன், நசீம் ஷா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். 182 ரன்கள் இலக்குடன் பாகிஸ்தான் அணி தற்போது விளையாடி வருகிறது.
இதையும் படிங்க: Asia cup 2022 - IND vs PAK : டாஸ் வென்ற பாகிஸ்தான்... இந்தியா பேட்டிங்