லண்டன்: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5வது டெஸ்ட் போட்டி கடந்த 27ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியை பேட் செய்ய அழைத்தது.
அதன் படி இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி 295 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்மித் 71 ரன்கள் அடித்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று (ஜூலை 29) 3வது நாள் ஆட்டம் தொடங்கியது. 12 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ஜாக் கிராலி, பென் டக்கெட் களம் கண்டனர். அதிராடியாக விளையாடிய இந்த ஜோடி 79 ரன்கள் சேர்த்த நிலையில் பென் டக்கெட் 7 பவுண்டரிகளுடன் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுபக்கம் விளையாடி அரை சதம் கடந்த ஜாக் கிராலி 9 பவுண்டரிகளுடன் 73 ரன்களுக்கு வெளியேறினார்.
தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த பென் ஸ்டோக்ஸ், 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 42 ரன்களுக்கு அவுட் ஆனார். புரூக் 7 ரன்களுடன் வெளியேற அடுத்ததாக களம் கண்ட ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட்டுடன் சேர்ந்து சிறப்பாக ஆடினார். இந்த கூட்டணி இங்கிலாந்து அணிக்கு மேலும் வலுசேர்த்தது. சதத்தை நெருங்கிய ஜோ ரூட் 91 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதனைத்தொடந்து பேர்ஸ்டோவ் 11 பவுண்டரிகளுடன் 78 ரன்களும், கிறிஸ் வோக்ஸ் 1, மொயின் அலி 29, மார்க் வுட் 9 என அடுத்தடுத்து வெளியேறினர். இறுதியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் சேர்த்துள்ளது. ஸ்டூவர்ட் பிராட் 2 ரன்களுடனும், அண்டர்சன் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி உள்ளார். மார்பி 3 விக்கெட்களும், கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் தலா 1 விக்கெட் சாய்த்துள்ளனர். இன்று 4வது நாள் ஆட்டம் தொடங்க உள்ளது.
இதையும் படிங்க: IND VS WI: இந்தியாவை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ் அணி!