அகமதாபாத்: இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 15ஆவது சீசன் இந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக களமிறங்க உள்ளன.
அதன்படி மொத்தம் பத்து அணிகள் ஐபிஎல் 2022இல் இடம்பெற்றுள்ளன. போட்டிகளின் எண்ணிக்கை 74ஆக உயர்த்தப்பட்டுள்ளது. லக்னோ அணியை ஆர்பி சஞ்சீவ் கோயங்கா குழுமமும், அகமதாபாத் அணியை சிவிசி கேபிடள் பார்ட்னர்ஸ் நிறுவனமும் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அகமதாபாத் அணிக்கு, அகமதாபாத் டைடன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகமல் இருந்தது. இதனிடையே இன்று(பிப்.9) சிவிசி கேபிடள் பார்ட்னர்ஸ் நிறுவனம் அகமதாபாத் அணிக்கு குஜராத் டைடன்ஸ் என்று பெயரிட்டுள்ளது.
இந்த அணிக்கு ஹார்திக் பாண்டியா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரஷித் கான் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். 2022 ஐபிஎல் அணிகளுக்கான மெகா ஏலம் இம்மாதம் தொடங்க உள்ளது. மொத்தம் 1,214 வீரர்கள். இதில் 896 இந்திய வீரர்கள், 318 வெளிநாட்டு வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கோயங்கா குழுமம் லக்னோ அணியின் பெயரை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் என்று அறிவித்துள்ளது. அதில், கே.எல் ராகுலை ரூ. 17 கோடிக்கும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ரூ. 9.2 கோடிக்கும், ரவி பிஷ்னாய் ரூ. 4 கோடிக்கும் தேர்வு செய்யப்பட்டனர். கே.எல் ராகுல் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: IND vs WI: இந்தியா பேட்டிங்; பெஞ்சில் பொல்லார்ட்!