துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் சர்வதேச லீக் டி20 கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் 20 மாதங்களுக்கு தடை செய்யப்பட்டு உள்ளார்.
ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்காக ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் முதல் சீசனில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இந்நிலையில், இரண்டாவது சீசனில் ஒப்பந்தத்தை நீட்டிக்க ஷார்ஜா வாரியர்ஸ் அணி நிர்வாகம், ஆப்கான் வீரர் நவீன் உல் ஹக்கை அணுகிய போது அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய போதும் நவீன் உல் ஹக் மசியவில்லை என தெரிகிறது. இதையடுத்து, சர்வதேச லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தும் நிர்வாகத்திடம் இது தொடர்பாக ஷார்ஜா வாரியர்ஸ் அணி நிர்வாகம் முறையிட்டு உள்ளது. இரு தரப்பிலும் பேசி சுமூக முடிவு காண தனியார் இடைத் தரகர் அமைக்கப்படு பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளது.
இருப்பினும் அதற்கும் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் இசைந்து கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து சர்வதேச லீக் டி20 நிர்வாகத்தின் 3 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக்கை 20 மாதங்களுக்கு ஐ.எல். டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து தடை செய்து உத்தரவிட்டு உள்ளது.
இதையும் படிங்க : U19 ஆசிய கோப்பை கிரிக்கெட் - வங்கதேசம் அணி சாம்பியன்!