கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெறும் முதல் பேட்மிண்டன் தொடரான தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன், ஜனவரி 12இல் தொடங்கியது. இத்தொடரின் போது இந்தியாவின் சாய்னா நேவால் மற்றும் பிரனாய் ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்டது. இதனால் இவர்களுடன் முதல் சுற்றுப் போட்டியில் விளையாட இருந்த வீரர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.
அதன்பின் மருத்துவமனை சென்ற சாய்னா, பிரனாய்க்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா சோதனை முடிவில் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. அதன்பின் இவர்கள் பங்கேற்க இருந்த முதல் சுற்றுப் போட்டிகள் தேதி மாற்றம் செய்யப்பட்டன.
அதன்படி நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் சாய்னா நேவால், மலேசியாவின் கிசோனா செல்வதுரையை எதிர்கொண்டார். இதில் ஆரம்பம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாய்னா, 21-15, 21-15 என்ற நேர் செட் கணக்கில் கிசோனா செல்வதுரையை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.
நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பிரனாய் 21-13, 14-21, 8-21 என்ற செட் கணக்கில் மலேசியாவின் லீ ஸி ஜியாவிடம் தோல்வியைடைந்து முதல் சுற்றோடு வேளியேறினார்.
மற்றொரு ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-12, 21-11 என்ற நேர் செட் கணக்கில் சக நாட்டு வீரரான சௌரப் வெர்மாவை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இதையும் படிங்க:இந்திய வீரர்களின் காயத்திற்கு காரணம் ஐபிஎல் தான் - ஜஸ்டீன் லங்கர்